உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சமோலி மாவட்டத்தில் உள்ள தபோவன்-ரேனி பகுதியில் நேற்று (பிப்.7) காலை பனிப்பாறைகள் திடீரென உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்கு ரிஷிகங்கா மின்திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், அப்பகுதியில் வசித்தவர்களின் வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. அத்துடன் வெள்ளத்தில் சிக்கி 150க்கும் மேற்பட்டோர் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினரும், இந்தோ-திபேத் எல்லை காவல் படையினரும், ராணுவ வீரர்களும் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர். முதற்கட்ட தகவலில் இதுவரை 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. காயத்துடன் மீட்கப்பட்டவர்கள் டேராடூன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.