டெல்லி: எஃப்டிஎஃப்சி ஹூண்டாய் இந்தியா கூச்சர் வாரத்தின் ஏழாவது நாளில், ஆடை வடிவமைப்பாளர் டோலி ஜே வடிவமைத்த பளபளப்பான வெள்ளி நிற லெஹங்காவை அணிந்து, அனைவரையும் ஈர்க்கும் வகையில் கேட்வாக்கில் மேடையை வலம் வந்தார், நடிகை திஷா பதானி.
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை திஷா பதானி. இவர் 'தோனி' படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வரும் இவர், தற்போது சூர்யாவின் ‘கங்குவா’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்த ஆடையை வடிவமைக்க வடிவமைப்பாளர் டோலி மற்றும் அவரது குழுவினருக்கு ஒரு மாதம் தேவைப்பட்டதாக கூறப்படுகிரது. டோலி ஜே, தனது சமீபத்திய ஆடை கலெக்ஷன்ஸ்-க்கு வானுலகத்தின் கிரேக்க தெய்வத்தின் பெயரான 'செலீன்' எனப் பெயரிட்டுள்ளார். அவரது இந்த கலெக்ஷன்களுக்கு மர்மம், அழகு, அதிசயம் ஆகிய காலத்தால் அழியாத சின்னமான நிலவு முன்னுதாரணமாக அமைந்ததாக அவர் கூறினார்.
மேலும் இது குறித்து அவர் கூறுகையில், “நாங்கள் இதற்காக ஒரு மாதத்திற்கும் மேலாக வேலை செய்தோம், வித்தியாசமான நுட்பங்களை நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்தோம். அதற்கான சரியான வெள்ளி நிறம் கிடைக்கும்வரை அதை தேடினோம். நாங்கள் எங்கள் மனதில் வைத்திருந்த அந்த சரியான வெள்ளி நிறத்தை யாராலும் தர முடியவில்லை. நாங்கள் இதற்காக முயற்சித்துக்கொண்டே இருந்தோம். இறுதியில் சரியாக வெள்ளி நிறமும், சரியான வடிவமும் கிடைத்தது.
இதற்கான முன்னுதாரணமாக பிரபஞ்சத்தின் மிக அழகான வானுலகம் அமைந்தது. நிலவு, அதன் கதிர்கள், கருமையான இரவில் அது பிரகாசிக்கும் விதம், மற்றும் நட்சத்திரங்கள் ஆகியவை இதற்கு முன்னுதாரணமாக அமைந்தது. பின்னர் அங்கிருந்து எங்கள் கலெக்ஷன்ஸை எடுக்க ஆரம்பித்தோம்.