டெல்லி : நாடாளுமன்றம் மற்றும் மக்களவையில் மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா ஒரு மனதாக மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் கடந்த 18ஆம் தேதி தொடங்கியது. 5 நாட்கள் மற்றும் நடத்த திட்டமிடப்பட்டு உள்ள இந்த சிறப்பு கூட்டத் தொடரின் முதல் நாள் கூட்டம் பழைய நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. கூட்டத் தொடரில் உரையாற்றிய பிரதமர் மோடி, 75 ஆண்டுகால் இந்திய வரலாற்றின் சாதனைகள் குறித்து பட்டியலிட்டார்.
தொடர்ந்து இரண்டாவது நாள் கூட்டம் புதிய நாடாளுமன்றத்தில் வைத்து நடைபெற்றது. முன்னதாக பழைய நாடாளுமன்ற கட்டடத்திற்கு பிரியா விடை வழங்கப்பட்டது. பழைய நாடாளுமன்ற கட்டடத்தின் முன் அனைத்து கட்சி உறுப்பினர்கள் ஒன்றாக குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
புதிய நாடாளுமன்றத்தில் முதல் மசோதாவாக நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். தொடர்ந்து மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டது.
இந்நிலையில் புதிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் முதல் மசோதாவாக தாக்கல் செய்யப்பட்ட மகளிர் 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் பெரும்பான்மையுடன் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
வாக்கெடுப்பில் 456 உறுப்பினர்கள் பங்கேற்ற நிலையில், இந்த மசோதாவுக்கு ஆதரவாக 454 உறுப்பினர்களும், மசோதாவுக்கு எதிராக 2 உறுப்பினர்களும் வாக்களித்தனர். அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி உள்பட இரண்டு பேர் மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர்.
அதேநேரம் இந்த மசோதா 2029 ஆம் ஆண்டு தான் நடைமுறைக்கு வரும் எனக் கூறப்படுகிறது. இந்திய அரசியலமைப்பின் 128வது திருத்த மசோதாவான பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் நாரி சக்தி வந்தன் மசோதா மக்களவை, மாநிலங்களவையில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவுடன் நிறைவேற்றப்பட வேண்டும் எனறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், நாட்டில் உள்ள ஒட்டுமொத்த மாநிலங்களில் சுமார் 50 சதவீத மாநிலங்களின் சட்டப் பேரவைகளில் இந்த இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று கூறப்படுகிறது. மேலும் கடந்த 2021ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டிய நிலையில் கரோனா உள்ளிட்ட காரணங்களால் தடைபட்டு போனதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அடுத்ததாக 2027ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதையடுத்து மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டு, புதிய தொகுதிகளின் அடிப்படையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நடைமுறைப்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க :மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா வாக்கெடுப்பு; பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு!