தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா வாக்கெடுப்பு; பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு! - எம் பி கனிமொழி

Women’s Reservation Bill 2023: நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா மீதான விவாதத்திற்குப் பிறகு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் பெரும்பாலான உறுப்பினர்கள் மசோதாவிற்கு தங்கள் ஆதரவினைத் தெரிவித்தனர்.

Womens Reservation Bill Voting Most of the members support
மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா வாக்கெடுப்பு

By PTI

Published : Sep 20, 2023, 10:17 PM IST

டெல்லி:நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் நேற்று (செப். 19) மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இன்று (செப்.20) அந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்றது.

இந்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்து பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, “இந்த மசோதாவிற்கு நான் ஆதரவு அளிக்கிறேன். இது ராஜீவ் காந்தியின் கனவுத் திட்டம். இந்த திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். மேலும் சாதிவாரி எஸ்சி/ எஸ்டி இட ஒதுக்கீட்டின்படி மசோதா நிறைவேற்றப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இந்த திட்டத்திற்கு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பலரும் ஆதரவு தெரிவித்து இருந்தாலும், மக்கள் தொகையின்படி தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்ட பின் மசோதா செயல்படுத்தப்படும் என்ற நிபந்தனைக்கு பலரும் எதிர்ப்புகளும் தெரிவித்தனர்.

இந்த மசோதா குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய தூத்துக்குடி தொகுதி எம்பி கனிமொழி, “இந்த மசோதா நாரி சக்தி வந்தான் மசோதா என்று அழைக்கப்படுகிறது. நாங்கள் வணங்கப்படுவதை விரும்பவில்லை. நாங்கள் பீடத்தில் இருக்க விரும்பவில்லை. உங்களது அம்மா மற்றும் சகோதரி என அழைக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் சமமாக மதிக்கப்படுவதையே விரும்புகிறோம். பீடத்தில் இருந்து இறங்கி சமமாக நடப்போம்.

இந்த நாட்டின் மீது எங்களுக்கு உரிமை உள்ளது. இந்த நாடு எங்களுக்கும் சொந்தமானது. இந்த நாடாளுமன்றம் எங்களுக்கு சொந்தமானது. இங்கு இருக்க எங்களுக்கு உரிமை உள்ளது. மசோதாவை சபையில் அறிமுகப்படுத்த 13 ஆண்டுகள் ஆனது. அதைச் செயல்படுத்துவதற்கு நாங்கள் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்?

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டிய கடமை பாஜகவுக்கு இருக்கிறது. ஆனால், பாஜக இதை அரசியல் ஆக்குகிறது. இடஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வருவது குறித்து நானே பலமுறை கேள்வி எழுப்பியுள்ளேன். எனது கேள்விகள் எல்லாவற்றிற்கும் ஒரே பதிலைத்தான் அளித்தார்கள்.

அவர்கள் மசோதா கொண்டு வருவதற்கு முன் அனைத்து அரசியல் கட்சிகளையும் இணைத்து ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும் என்று கூறினார்கள். தற்போது என்ன ஒருமித்த கருத்து உள்ளது என்பதை அறிய விரும்புகிறேன். இந்த மசோதா ரகசியமாக கொண்டு வரப்பட்டது. இது குறித்து என்ன விவாதங்கள் நடத்தப்பட்டது? இந்த அமர்வு எதற்காக அழைக்கப்பட்டது என்பதே எங்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை.

இருப்பினும், இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது மனம் மகிழ்ச்சி அடைந்தது. 2024 தேர்தலை மனதில் கொண்டு பாஜக இந்த மசோதாவைக் கொண்டு வந்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. நமது அண்டை நாடுகளை விட நமது நாட்டில் அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாக இருக்கிறது.

இந்த மசோதா பெண்களுக்கு கொடுக்கப்படும் சலுகை அல்ல, சலுகை எனக் கூறுவதை முதலில் நிறுத்திக் கொள்ளுங்கள். தொகுதி மறுவரைக்குப் பின் நாடாளுமன்றத்தில் தென்னிந்தியாவின் பிரதிநிதித்துவம் குறைக்கப்படலாம். எனவே, தொகுதி மறுவரையீட்டிற்கு முன்னதாகவே மசோதா நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

8 மணி நேறத்திற்கும் மேலாக மசோதாவிற்கு மேலாக விவாதம் நடைபெற்றது. இதனை அடுத்து மசோதா நிறைவேற்றப்படுவதற்காக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் அவையில் பங்கேற்ற 456 உறுப்பினர்களில் 454 உறுப்பினர்கள் மசோதாவிற்கு ஆதரவாகவும், 2 பேர் மசோதாவிற்கு எதிராகவும் வாக்களித்து உள்ளனர்.

இதையும் படிங்க: கேரளா ஓணம் பம்பர் லாட்டரி: ரூ.25 கோடி யாருக்கு? லாட்டரி எண் அறிவிப்பு..

ABOUT THE AUTHOR

...view details