டெல்லி:நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் நேற்று (செப். 19) மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இன்று (செப்.20) அந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. அதில், திமுகவைச் சேர்ந்த தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவரது கருத்துக்களை முன்வைத்தார்.
அப்போது அவர், “இந்த மசோதா நாரி சக்தி வந்தான் மசோதா என்று அழைக்கப்படுகிறது. எங்களுக்கு வணக்கம் செலுத்துவதை நிறுத்துங்கள். நாங்கள் வணங்கப்படுவதை விரும்பவில்லை. நாங்கள் பீடத்தில் இருக்க விரும்பவில்லை. உங்களது அம்மா மற்றும் சகோதரி என அழைக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் சமமாக மதிக்கப்படுவதையே விரும்புகிறோம். பீடத்தில் இருந்து இறங்கி சமமாக நடப்போம்” என்றார்.
முன்னதாக, பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா 2023 குறித்து மக்களவையில் தனது உரையைத் தொடங்கும் போது, பாஜக எம்பிகள் எதிர்ப்பு தெரிவிக்கத்த தொடங்கினர். அப்போது தேசியவாத காங்கிரஸ் கட்சி உறுப்பினர் சுப்ரியா சுலே, உள்ளிட்ட சில உறுப்பினர்கள் கனிமொழி இன்னும் பேசவே ஆரம்பிக்கவில்லை. அவரை பேச விடுங்கள் என அவருக்கு ஆதராவக குரல் எழுப்பினர். அப்போது கனிமொழி பாஜக எம்பிக்கள் குறித்து குற்றம் சாட்டினார். அவர் மேலும் கூறுகையில், “இந்த நாட்டின் மீது எங்களுக்கு உரிமை உள்ளது. இந்த நாடு எங்களுக்கும் சொந்தமானது. இந்த நாடாளுமன்றம் எங்களுக்கு சொந்தமானது. இங்கு இருக்க எங்களுக்கு உரிமை உள்ளது” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய கனிமொழி, “அருண் ஜெட்லி கூறியதை நான் மேற்கோள் காட்ட விரும்புகிறேன், பிரதிநிதித்துவம் மற்றும் பாகுபாடு நம் முகத்தை உற்று நோக்கும் வரை ஆண்களும் பெண்களுக்கான நீதியை உறுதிப்படுத்த முடியும் என்ற வாதம் பலவீனமடைந்துள்ளது. டோக்கனிசத்தின் அரசியல் இப்போது கருத்துகளின் அரசியலாக மாற வேண்டும். எனவே டோக்கனிசத்தை நிறுத்துங்கள்.