திருப்பதி: ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டத்தில் புதலாப்பட்டு-நாயுடுப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் காடாங்கி என்ற இடத்திற்கு அருகே சுங்கச்சாவடி ஒன்று செயல்பட்டு வருகிறது. மற்ற சுங்கச்சாவடிகளோடு ஒப்பிடுகையில் இந்த சுங்கச்சாவடிக்கு ஒரு தனிச்சிறப்பு உள்ளது. இந்த சுங்கச்சாவடியில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் பெண்கள்தான். பாகாலா, சந்திரகிரி பகுதிகளைச் சேர்ந்த 11 பெண்கள் இந்த சுங்கச்சாவடியில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் சுமார் ஓராண்டாக இங்கு பணிபுரிகின்றனர்.
இந்த சுங்கச்சாவடியில் 10 கவுன்ட்டர்கள் உள்ளன. இதில் 11 பெண்கள் சுங்கக்கட்டணம் வசூலிக்கிறார்கள். போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த சுங்கச்சாவடிக்கு சென்று பார்த்தால், இந்தப் பெண்கள் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ஃபாஸ்டேக்கை ஸ்கேன் செய்து கட்டணம் வசூலிப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருப்பார்கள். தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை பணிபுரிகிறார்கள்.
சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்காக வாகனங்களில் அணிவகுத்து நிற்பதால் கடும் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படும். இதில், விபத்துகள், சண்டைகள் என பல சம்பவங்கள் நடக்கும். குடிபோதையில் வாகனம் ஓட்டும் ஆசாமிகள் தகராறில் ஈடுபடுவார்கள். இதுபோன்ற சூழ்நிலைகளை கையாள்வது மிகவும் சவாலான விஷயம்தான். இங்கு பணிபுரியும் பெண்கள் அனைவரும், தினம்தினம் இதுபோன்ற பிரச்னைகளை தைரியமாக எதிர்கொள்கிறார்கள். அதேபோல், நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், விறுவிறுப்பாக பணி செய்ய வேண்டியிருக்கும். இந்த பெண்கள் மின்னல் வேகத்தில் பணி செய்கிறார்கள்.
இதுகுறித்து காடாங்கி சுங்கச்சாவடியில் பணிபுரியும் லிகிதா என்ற பெண் கூறும்போது, "சுங்கச்சாவடியில் வேலை பார்க்க முதலில் பயந்தேன். பிறகு பெற்றோரும் ஊக்குவித்ததால் தைரியம் வந்தது" என்று கூறினார்.