தெலங்கானா:ஹைதராபாத்தில் ஜூப்ளி ஹில்ஸ் என்ற பகுதியில் ஒரு பெண் 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள வைர மோதிரத்தைத் திருடியுள்ளார். கடந்த ஜூன் 27ஆம் தேதி ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள பல் மற்றும் தோல் மருத்துவமனைக்கு நரேந்திர குமார் அகர்வாலின் மருமகள் வந்துள்ளார். அந்த மருத்துவமனையில் நரேந்திர குமார் அகர்வாலின் மருமகள் சிகிச்சைப் பெற்றுள்ளார்.
அப்போது அந்தப் பெண் தனது கை விரலில் அணிந்திருந்த வைர மோதிரத்தை கழற்றி, அருகில் இருந்த டேபிளில் வைத்துள்ளார். பின்னர் சிகிச்சை முடிந்து மருத்துவமனை விட்டுச்செல்லும் போது அவரது வைர மோதிரத்தை மறந்து அங்கேயே விட்டுச் சென்றுள்ளார். சிறிது நேரத்திற்குப் பிறகு மருத்துவமனையில் அந்த மோதிரத்தைக் கண்ட மற்றொரு பெண், அந்த வைர மோதிரத்தை எடுத்து தனது பர்சில் வைத்துக் கொண்டார்.
பின்னர் அந்த வைர மோதிரம் விலை உயர்ந்தது என்பதை உணர்ந்த அப்பெண் மிகவும் பதற்றம் அடைந்தார். உடனே நாம் போலீஸில் பிடிபடுவோம் என பயந்து கழிவறைக்குச் சென்றுள்ளார். அங்கு அந்த வைர மோதிரத்தை டிஷ்யூ பேப்பரால் துடைத்து அப்புறப்படுத்தியுள்ளார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்த நரேந்திர குமாரின் மருமகள் தனது கையில் இருந்த வைர மோதிரத்தை மருத்துவமனையில் தொலைத்து விட்டு வந்ததை உணர்ந்து பதற்றம் அடைந்தார்.