இம்பால் :மணிப்பூரில் பள்ளி முன் பெண் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு இம்பால் பகுதியில் உள்ள காங்போக்பி மாவட்டத்தில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றதாக பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். வன்முறைச் சம்பவங்கள் நிகழும் மணிப்பூரில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் 1 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.
வன்முறைச் சம்பவங்கள் காரணமாக ஏறத்தாழ இரண்டு மாதங்கள் பள்ளிகள் மூடப்பட்டு இருந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பள்ளிகளை திறக்க முதலமைச்சர் பிரேன் சிங் உத்தரவிட்டு இருந்தார். இந்நிலையில், காங்போக்பி மாவட்டத்தில் பள்ளியின் முன் பெண் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளிக்கு அருகே ஏதோ வேலை காரணமாக பெண் சென்றதாகவும் அவருக்கும் பள்ளிக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். காங்போக்பி மாவட்டத்தில் அதிகாலை முதலே கிராம பகுதியில் புகுந்து மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய நிலையில், பாதுகாப்பு படையினர் தலையீட்டு அதை தடுத்து நிறுத்தியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மாலை வேளையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், பெண் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து ஆயிரம் முதல் ஆயிரத்து 500 பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து அசாம் ரைபிள்ஸ் மற்றும் பாதுகாப்பு படையினர் விரைந்து வரவழைக்கப்பட்டு நிலைமை சரிசெய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.