முசாபர்பூர் (பீகார்): திருமணத்திற்காகப் பெற்ற மகளை விற்றுவிட்டு, மகனைத் தனியார்ப் பள்ளி விடுதியில் விட்டுச் சென்ற இரக்கமில்லாத தாய். கணவன் மற்றும் மனைவி தங்களது குழந்தைகளுடன் ராஞ்சியில் வசித்து வந்துள்ளனர். பின்னர் அவர்களின் வாழ்வாதாராம் கருதி, ராஞ்சியில் இருந்து பீகார் மாநிலம் முசாபர்பூருக்கு பிழைப்பிற்காகக் குடிபெயர்ந்துள்ளனர். இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவரது கணவர் இறந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு நபருடன் பழகி வந்துள்ளார்.
பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். ஆனால் குழந்தைகளை ஏற்று கொள்ள மனமில்லாமல் அந்த நபர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் காரணத்தை அப்பெண்ணிடம் தெரிவித்துள்ளார். இதனால் இரக்கமில்லாத அந்தப் பெண், தன் மகளை 2.5 லட்சத்திற்கு வியாபாரியிடம் விற்றுவிட்டு, மகனைத் தனியார்ப் பள்ளி விடுதியில் சேர்த்துவிட்டு இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, விடுதியில் தங்கியிருந்த மாணவன் விடுதிக்கட்டணம் செலுத்ததனால், ஆசிரியர்கள் மாணவனிடம் விசாரித்துள்ளனர். பின்னர் மாணவன் நிகழ்ந்த சம்பவங்களை ஆசிரியரிடம் அடுக்கியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், மாணவரின் உறவினர்களான தாத்தா மற்றும் மாமாவிற்குத் தகவல் தெரிவித்து உள்ளனர். மாணவரின் உறவினர்கள் இது குறித்து காவல் துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் மற்றொரு பெண் குழந்தையை மீட்க வலியுறுத்தி, இரக்கமில்லாமல் குழந்தைகளை விற்ற தாயைக் கைது செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.