மேற்குவங்கம்:அசாம் மாநிலம் கவுஹாத்தியிலிருந்து மேற்குவங்க மாநிலம் அலிப்பூர் துவார் செல்லும் சிஃபங் எக்ஸ்பிரஸ் ரயிலில், கடந்த 5ஆம் தேதி பெண்மணி ஒருவர் தனது குழந்தையுடன் பயணித்தார். அவர் அலிப்பூர் துவார் சென்று கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது, ரயில் அசாமின் ஃபகிராகிராம் ரயில் நிலையத்தை அடைந்தபோது, அந்த பெண்மணி பயணித்த பெட்டியிலிருந்து பெரும்பாலானவர்கள் இறங்கிவிட்டனர். இதனால் ரயில் பெட்டி காலியாக இருந்தது. இரண்டு இளைஞர்கள் மட்டுமே அதில் இருந்தனர். மேலும், ஃபகிராகிராம் ரயில் நிலையத்திலிருந்து அலிப்பூர் துவார் வரையில் நடுவில் எந்த நிறுத்தமும் இல்லை.
இந்த சூழலில், ரயில் பெட்டியில் வேறு யாரும் இல்லாததை சாதகமாக எடுத்துக் கொண்ட அந்த இளைஞர்கள், குழந்தையுடன் இருந்த பெண்மணியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்து கொண்டதாக தெரிகிறது. அந்த பெண்மணி இளைஞர்களை எதிர்த்து பேசியபோது, அவர்கள் அடித்து துன்புறுத்தியுள்ளனர். பிறகு கைகளையும் கட்டி வைத்துள்ளனர். தங்களுக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் குழந்தையை ரயிலில் இருந்து வெளியே தூக்கி வீசிவிடுவதாக் கூறி மிரட்டி, அந்த பெண்மணியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அந்த ரயில் பெட்டியில் உதவிக்கு சக பயணிகளோ அல்லது ஆர்பிஎப் வீரர்களோ இல்லாத சூழலில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
இதையடுத்து அன்று மாலையில் ரயில் அலிப்பூர் துவார் சந்திப்பை அடைந்ததும், பாதிக்கப்பட்ட பெண்மணி உடனடியாக ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினரை அணுகி நடந்ததைக் கூறினார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்மணி அளித்த புகாரின் பேரில் துரிதமாக செயல்பட்ட ரயில்வே போலீசார், பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை தேடும் நடவடிக்கையைத் தொடங்கினர். இதைத் தொடர்ந்து அன்று இரவு சம்பந்தப்பட்ட இரண்டு இளைஞர்களையும் போலீசார் கைது செய்தனர்.