டெல்லி :உத்தர பிரதேசத்தில் பதவி வகிக்கும் பெண் நீதிபதி, சக மூத்த நீதிபதியால் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், கண்ணியமான முறையில் தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ள அனுமதி அளிக்குமாறும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
அந்த கடிதத்தில், தான் நீதிபதியாக பணியாற்றிய மாவட்டத்தில், நீதிபதியாக பணியாற்றும் ஒருவரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும், அவருடன் பணியாற்றிய சக பணியாளர்களாலும் துன்புறுத்தலுக்கு உள்ளானதாகவும் குறிப்பிட்டு உள்ளார். இது தொடர்பாக அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் புகாரளித்தும், நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என அந்த கடிதத்தில் பெண் நீதிபதி குறிப்பிட்டு உள்ளார்.
மேலும், தனக்கு இனி வாழ விருப்பம் இல்லை என்றும் கடந்த ஒன்றரை வருடங்களாக நடைப் பிணமாக மாற்றப்பட்டேன் என்றும் கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது. இந்த ஆன்மாவும், உயிரும் இல்லாத உடலை சுமந்து செல்வதில் எந்த நோக்கமும் இல்லை என்றும் வாழ்க்கையில் எந்த நோக்கமும் இல்லாததால் வாழ்க்கையை கண்ணியமான முறையில் முடிக்க தயவு செய்து அனுமதிக்குமாறும் பெண் நீதிபதி அந்த கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.