மீரட் (உத்தரபிரதேசம்):உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள கன்கர்ஹேடாவைச் சேர்ந்தவர் கவிடாவின் மனைவி ராஜூ (34). இவர் கடந்த இரண்டு வருடங்களாக நரம்புத்தளர்ச்சி, அசாதாரண இதய துடிப்பு மற்றும் நெஞ்சுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதுதொடர்பாக சிகிச்சைக்காக பல அரசு மற்றும் அரசு சாரா மருத்துவமனைகளை ராஜூ அணுகியுள்ளார்.
இருந்தாலும் சிகிச்சை பெற முடியவில்லை. இந்நிலையில் மீரட்டில் உள்ள லாலா லஜபதி ராய் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்குள்ள இருதய அறுவை சிகிச்சை பிரிவில் அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், ராஜூவின் மிட்ரல் வால்வு பாதிப்படைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே மிட்ரல் வால்வு மாற்று அறுவை சிகிச்சை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அறுவை சிகிச்சை மருத்துவர் ரோஹித் குமார் செளஹானின் தலைமையிலான மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். அப்போது ராஜூவின் இதய ஓட்டம் 210 நிமிடங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அதேநேரம் அதிநவீன மருத்துவ உபகரணம் மூலம் செயற்கையாக இதயம் துடிக்க வைக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்று நிமிடங்களுக்கு மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டமும் நிறுத்தப்பட்டது. இவ்வாறான இக்கட்டான சூழலில் ராஜூக்கு மிட்ரல் வால்வு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:இதைச் சாப்பிட்டால் 12 மணி நேரம் வரை பசிக்காது...? அதிசய "நாக்டூன்" கிழங்கு...