தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பெங்களூருவில் அரசு அதிகாரி கொலை! என்ன காரணம்? - புவியியலாளர் பிரதிமா

Woman Geologist Murder Case: கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பெண் புவியியலாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொலை செய்யப்பட்ட புவியியலாளர் பிரதிமா
கொலை செய்யப்பட்ட புவியியலாளர் பிரதிமா

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 6, 2023, 11:11 AM IST

Updated : Nov 6, 2023, 11:55 AM IST

பெங்களூரு :கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பெண் புவியியலாளர், கழுத்து அறுபட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக சுரங்கம் மற்றும் புவியியல் துறையின் துணை இயக்குநராக பணியாற்றி வந்தவர் பிரதிமா (வயது 37). கணவரைப் பிரிந்த பிரதிமா, சுப்ரமண்யபூர் காவல் நிலையத்திற்குட்பட்ட தொட்டகல்லாசந்திராபவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், தனியாக வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் புவியியலாளர் பிரதிமா, கழுத்தை அறுத்து, கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இந்த கொலை குறித்து, பெங்களூரு நகர தெற்கு பிரிவு டிசிபி ராகுல் குமார் ஷாஹபுர்வாட் கூறுகையில், "கடந்த சனிக்கிழமை (நவ. 4) அன்று இரவு 8 மணியளவில் அலுவலகத்தில் இருந்து பிரதிமா வீடு திரும்பி உள்ளார். இந்த நிலையில், பிரதிமாவின் அண்ணன், பிரதிமாவிற்கு கால் செய்துள்ளார். அவரின் தொடர் அழைப்புக்கு பிரதிமா பதிலளிக்காததால், சந்தேகம் அடைந்த அவர், பிரதிமாவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

வீட்டில் பிரதிமா இறந்த நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்” என்று கூறினார். மேலும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற தடயவியல் மற்றும் தொழில்நுட்ப குழுக்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர் என்றும், இந்த கொலை குறித்து விசாரிப்பதற்கு மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், பெங்களூருவில் கடந்த 4 ஆண்டுகளாக பிரதிமா பணிபுரிந்து வரும் நிலையில், ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். பிரதிமா கழுத்து நெறிக்கப்பட்டு, அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், பிரதிமாவின் நகைகள் ஏதும் திருடப்படவில்லை என்றும் இந்த கொலை குறித்து முழுமையாக தெரிந்த பின், கூடுதல் தகவல்களை பகிர்வதாகவும் போலீசார் கூறினர்.

அதேநேரம் பிரதிமா சட்டவிரோதமாக இயங்கிய குவாரிகளை மூடியதால் தான் கொலை செய்யப்பட்டதாக வதந்திகள் பரவி வருகின்றன. இந்த கொலை குறித்து கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா கூறியதாவது, "இந்த கொலைக் குறித்து எனக்கு இப்போது தான் தெரிந்தது. கொலைக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும்" என்று கூறினார்.

இதையும் படிங்க:ரயில்வே தண்டவாளத்தில் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து! 4 பேர் பலி! ரயில் வராததால் பெரும் உயிர் சேதம் தவிர்ப்பு!

Last Updated : Nov 6, 2023, 11:55 AM IST

ABOUT THE AUTHOR

...view details