கேரளா: கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் உள்ள உதவிபெறும் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்த சந்தீப்(42) என்ற நபர், நேற்று(மே.9) தனது உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் அவருக்கு காலில் அடிபட்டதாகத் தெரிகிறது. இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார், சந்தீப்பை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர், நேற்றிரவு சந்தீப்பை மருத்துவ சிகிச்சைக்காக கொட்டாரக்கரையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு, பணியில் இருந்த மருத்துவர் வந்தனா தாஸ்(23) சந்தீப்பிற்கு சிகிச்சை அளித்துள்ளார். அப்போது திடீரென ஆக்ரோஷமாக மாறிய சந்தீப், அங்கிருந்த மருத்துவர் மற்றும் காவலர்களை தாக்க ஆரம்பித்தார். மருத்துவரின் கத்தரிக்கோலை எடுத்து அவர் சரமாரியாக தாக்கியதில் மருத்துவர், போலீசார் உள்ளிட்ட 5 பேர் காயமடைந்தனர். இதில், மருத்துவர் வந்தனாவின், கழுத்து உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், மருத்துவர் வந்தனா இன்று அதிகாலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். மருத்துவர் குத்திக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு மருத்துவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பணியில் இருந்த மருத்துவர் கொல்லப்பட்டதற்கு இந்திய மருத்துவர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கேரளாவில் உள்ள அனைத்து மருத்துவர்களும் நாளை காலை 8 மணி வரை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவு தவிர அனைத்து மருத்துவ சேவைகளும் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான போலீசாரின் விசாரணையில், மருத்துவரை தாக்கிய சந்தீப் போதைக்கு அடிமையானவர் எனத் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் கூறும்போது, "சந்தீப் போதைக்கு அடிமையானவர். போதையில் பள்ளிக்குச் சென்று பிரச்னை செய்ததால், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். உறவினர்களிடமும், அக்கம்பக்கத்தாரிடமும் அடிக்கடி பிரச்னை செய்து வந்துள்ளார். நேற்று அப்பகுதியில் பிரச்னை நடந்தபோதும் சந்தீப்தான் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டுவந்தது முதலே தொடர்ந்து அராஜகம் செய்து வந்தார். மருத்துவர், போலீசாரை தாக்கியதோடு, அங்கிருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கினார்" என்று கூறினர்.
இதையும் படிங்க: கேரளாவில் மீண்டும் செல்போன் விபத்து - ரியல்மி செல்போன் பேட்டரி வெடித்து இளைஞர் காயம்!