தெலங்கானா மாநிலம், சித்திபேட் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர், செல்போன் செயலியில் கடன் பெற்று, குறுகிய காலத்தில் திருப்பிச் செலுத்த முடியாமல் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த பெண் அக்கவுண்ட் க்ளஸ்டர் என்ற நிறுவனத்தில் ஏஈஓ(AEO) ஆக பணிபுரிந்தார். கரோனா காலத்தில் தனது தந்தைக்கு ஏற்பட்ட பணத் தேவையின் நிமித்தம் ’ஸ்னாபிட் லோன்’ (Snapit Loan) என்ற செயலி மூலம் ஆன்லைனில் ஆவணங்களைச் சமர்ப்பித்து எளிதில் 3 லட்சம் ரூபாய் கடனாக பெற்றார்.
அவருடைய தந்தையின் தொழிலில் போதிய வருமானம் கிடைக்காத நிலையில், அந்தக் கடனை குறுகிய காலத்தில் அவரால் திருப்பிச் செலுத்த முடியவில்லை. இதனிடையே, ஸ்னாபிட் லோன் செயலி மேலாளர்கள் அந்தப் பெண்ணிற்கு செல்போன் அழைப்புகளில் அழுத்தம் கொடுத்தனர். இருப்பினும், குறுகிய காலத்தில் 3 லட்சம் ரூபாய்யை திருப்பிச் செலுத்தச் சொல்வது அவருக்கு சிரமத்தையே ஏற்படுத்தியது.
பணத்தைத் திருப்பிச் செலுத்த தாமதமாகவே அந்தப் பெண்ணிற்கு அச்செயலி தரப்பில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கடன் விவகாரம் குறித்து செயலி தரப்பிலிருந்து அந்தப் பெண்ணின் நெருங்கிய நண்பர்களுக்கு வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பப்பட்டது. இதனால், மன அழுத்ததிற்குள்ளான அந்தப் பெண் கடந்த 14ஆம் தேதி தற்கொலைக்கு முயன்றார்.