தர்பங்கா: கரோனா பாதிப்புக்குள்ளான தனது 5 மாத குழந்தைக்கு, அதன் தாய் மருத்துவமனைக் கட்டுப்பாடுகளை மீறி தாய்ப்பால் ஊட்டிய நெகிழ்ச்சி சம்பவம் பிகாரில் நிகழ்ந்துள்ளது.
பிகார் மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்குள்ளான ஐந்து மாத ஆண் குழந்தை ஒன்று அங்குள்ள தர்பங்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாள்களாக தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அந்தக்குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முதல் இரண்டு நாள்கள் தனிமைப்படுத்தபட்ட வார்டு பிரிவுக்கு அக்குழந்தையின் தாய் செல்லவில்லை. மூன்றாவது நாளான இன்று தனது குழந்தையின் அழுகுரலைக் கேட்டு மனம் தாங்க முடியாமல், குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்படும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுக்குள் அந்ததாய் உடனடியாக சென்றார்.
அங்கு பசியால் அழுத தனது குழந்தைக்கு தாய்ப்பாலூட்டி குழந்தையின் அழுகையை நிறுத்தினார். மருத்துவமனை ஊழியர்கள் அந்தப் பெண்ணைத் தடுக்க முயற்சித்தும், அவர் அதனை கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறிவிட்டதாக கூறி மருத்துவமனை நிர்வாகம் அந்தப் பெண்ணை எச்சரித்தனர்.