காக்கிநாடா: இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று காலம் முடிவுக்கு வந்துவிட்டது. மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டனர். இந்த சூழலில் இன்னும் சிலர் கொரோனா குறித்த உச்சகட்ட பயத்தில் இருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? ஆம், ஆந்திராவில் தாயும் மகளும் சுமார் இரண்டு ஆண்டுகளாக கொரோனா பயத்தில் தனிமைப்படுத்திக் கொண்டிருந்தனர்.
ஆந்திராவின் காக்கிநாடா அருகே உள்ள கொய்யூர் கிராமத்தைச் சேர்ந்த சூரிபாபு என்பவரது மனைவியும் மகளும் 2020ஆம் ஆண்டு பெருந்தொற்று காலம் தொடங்கியது முதல் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டனர். பெருந்தொற்று காலம் முடிந்து அனைவரும் இயல்பு நிலைக்கு வந்த போதும், இவர்களால் இயல்பாக மாற முடியவில்லை. இதனால் வீட்டிலேயே முடங்கிவிட்டனர். சூரிபாபுதான் அவர்களுக்கு உணவு கொடுத்து பராமரித்து வந்துள்ளார்.
கடந்த சில நாட்களாக சூரிபாபுவின் மனைவிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அப்போது மருத்துவமனைக்கு செல்ல சூரிபாபு அழைத்தும் அவர் மறுத்துவிட்டார். அதோடு சூரிபாபுவையும் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என வற்புறுத்தியதாக தெரிகிறது. இதனால் நிலைமை கைமீறிச் செல்வதை உணர்ந்த சூரிபாபு சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.