புதுச்சேரிக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுடன் திமுக கூட்டணி அமைத்துள்ளது. திமுகவுக்கு 13 தொகுதிகளிலும், காங்கிரசுக்கு 15 தொகுதிகளிலும், கூட்டணி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட், வி.சி.க கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன. அதேபோல், என்.ஆர். காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளிலும், பாஜக, அதிமுக, பாமக ஆகிய கட்சிகள் சேர்ந்து 14 தொகுதிகளிலும் களம் காண்கின்றன.
அண்மையில் நாராயணசாமியின் அமைச்சரவையில் இருந்த அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏக்கள் தீப்பாய்ந்தான், ஜான்குமார் உள்ளிட்டோரை தங்கள் கட்சியில் இணைத்து, காங்கிரஸ் ஆட்சியை புதுச்சேரியில் கவிழ்த்தது பாஜக. இதனால் நடக்கவிருக்கும் தேர்தலில் வென்று பாஜகவுக்குத் தக்க பாடம் புகட்ட காங்கிரஸும், புதுச்சேரியில் தனது கொடியைப் பறக்கவிட பாஜகவும் கோதாவில் குதித்திருக்கின்றன.
புதுச்சேரி கடந்த 1954ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி, இந்தியாவுடன் ஒன்றிணைந்தது. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 1963இல்தான் இந்தியாவின் அதிகாரப்பூர்வ யூனியன் பிரதேசமாக புதுச்சேரி அறிவிக்கப்பட்டது.
புதுச்சேரியானது, காரைக்கால், மாஹே, ஏனாம் உள்ளிட்ட பிராந்தியங்களை உள்ளடக்கியது. புதுச்சேரியில் 23, காரைக்காலில் 5, ஏனாம், மாஹேவில் தலா ஒரு தொகுதியென அம்மாநிலத்தில் மொத்தம் 30 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அதில் 25 பொதுத்தொகுதிகள், ஐந்து தனித்தொகுதிகள். இங்கு 10 லட்சத்து 4 ஆயிரத்து 197 வாக்காளர்கள் உள்ளனர். அதில், நான்கு லட்சத்து 72 ஆயிரத்து 650 ஆண் வாக்காளர்களும், 5 லட்சத்து 31 ஆயிரத்து 431 பெண் வாக்காளர்களும், 116 மூன்றாம் பாலினத்தவர்களும் உள்ளனர்.
புதுச்சேரி 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் 486 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். அதில் 347 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 81 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 58 வேட்புமனுக்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இறுதியாகக் களத்திலுள்ள 324 வேட்பாளர்களில், 290 ஆண் வேட்பாளர்களும், 34 பெண் வேட்பாளர்களும் உள்ளனர். நெல்லித்தோப்பு மற்றும் ஒழுக்கரையில் அதிகபட்சமாக, 16 வேட்பாளர்களும், மாஹே மற்றும் கதிர்காமமில் குறைந்தபட்சமாக ஆறு வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
வேட்பாளர்களிலேயே, நெடுங்காடு (தனி) தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் மாரிமுத்து, அதிக வயதுடைய வேட்பாளராக இருக்கிறார். அவருக்கு வயது 78. எம்பலம் தொகுதியில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த அரவிந்தன், மங்கலம் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த பாரத் கலை, நெடுங்காடுத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த கீதா, திருபுவானை (தனி) தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ரஞ்சித் ஆகியோர் குறைந்த வயதுடைய வேட்பாளர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு வயது 25.
மக்கள் நீதி மய்யத்தில் மூன்று பெண் வேட்பாளர்களும், அமமுகவில் இரண்டு பெண் வேட்பாளர்களும், காங்கிரஸில் இரண்டு பெண் வேட்பாளர்களூம், நாம் தமிழர் கட்சியில் 14 பெண் வேட்பாளர்களூம், இந்திய ஜனநாயக கட்சியில் ஒரு பெண் வேட்பாளரும், காங்கிரஸில் ஒரு பெண் வேட்பாளரும், தேமுதிகவில் ஒரு பெண் வேட்பாளரும், சுயேச்சையாக 10 பெண் வேட்பாளர்களும் களத்தில் இருக்கின்றனர்.
கோடீஸ்வர வேட்பாளர்களாக சுயேச்சைகள் 19 பேரும், என்.ஆர்.காங்கிரஸில் 13 பேரும், காங்கிரஸில் 12 பேரும், திமுகவில் 9 பேரும், பாஜகவில் 9 பேரும், அதிமுகவில் 4 பேரும், அமமுகவில் 3 பேரும், மக்கள் நீதி மய்யத்தில் 3 பேரும், ஐக்கிய ஜனதா தளத்தில் இரண்டு பேரும், நாம் தமிழர் கட்சியில் ஒருவரும் போட்டியிடுகின்றனர். அதேபோல், குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் 54 பேரும், தீவிர குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் 28 பேரும் இருக்கின்றனர்.