விசாகப்பட்டினம் எஃகு ஆலைக்கு அடிக்கல் நாட்டி, ஐந்து தசாப்தங்கள் கடந்துவிட்டன. நீண்டதோர் போராட்டத்தில் கலந்துகொண்டு தெலுங்கு மக்கள் செய்த தியாகங்களின் விளைவாகத்தான் அந்த ஆலை உருவானது. பல்வேறு தடைகளை, இன்னல்களை, இடையூறுகளை எதிர்கொண்டு இறுதியில், அந்த எஃகு ஆலை செயல்படத் தொடங்கியது.
அப்போதைய பிரதமராக இருந்த பி.வி.நரசிம்ம ராவ், அதை 1992இல் தேசத்திற்கு அர்ப்பணித்தார். இப்போது ஆலையை முற்றிலும் தனியார்மயம் ஆக்குவதென்று அரசு எடுத்த தீர்மானத்தை ஜீரணிப்பது அரிது. விசாகப்பட்டினம் எஃகு ஆலை பொதுத்துறை நிறுவனங்களில் 'நவரத்னா' என்றழைக்கப்படும் ஒன்பது ஆகச்சிறந்த நிறுவனங்களில் ஒன்று.
2002 முதல் 2015ஆம் ஆண்டு வரையிலான, காலகட்டத்தில் அது மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் பல்வேறு வழிகளில் ரூபாய் 42,000 கோடி வருமானத்தை ஈட்டிக் கொடுத்திருக்கிறது. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக அந்த நிறுவனம் நஷ்டங்களைச் சந்தித்திருக்கிறது. அதன் காரணங்களைப் புரிந்து கொள்வது ஒன்றும் கஷ்டமில்லை. நஷ்டம் என்ற சாக்கில் அதைத் தனியார்மயம் ஆக்குவதற்கு அரசு எடுத்த முடிவுதான் மக்களுக்குப் பேரதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. விசாகப்பட்டினம் எஃகு ஆலையைக் கட்டுவதற்கு நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின்படி அரசு 22,000 ஏக்கருக்கும் மேலான மக்கள் நிலத்தை கையகப்படுத்தியது. விவசாயிகளிடமிருந்து நிலம் மிகவும் மலிவான விலையில் வாங்கப்பட்டது. விவசாயிகளுக்கு அந்த நேரத்தில் கொடுக்கப்பட்ட ஆகப்பெரிய விலை என்பது ஒரு ஏக்கருக்கு ரூபாய் 20,000 மட்டுமே. இன்று அந்த நிலங்களின் சந்தைவிலை ஒரு ஏக்கருக்கு ஐந்துகோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. இந்தப் பின்புலத்தில் வைத்துப் பார்த்தால், விசாகப்பட்டினம் எஃகு ஆலையின் மதிப்பு, ரூபாய் இரண்டு லட்சம் கோடியைத் தாண்டும் என்று மதிப்பிடலாம்.
நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒரு லட்சம் பேருக்கு மேல் வேலை தருகிறது, அந்த ஆலை. கட்டுமானக் காலகட்டத்தில் நிலத்தை விட்டுக் கொடுத்துவிட்டு, வெளியேறியவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் பல இன்னும் நிறைவேற்றப் படவில்லை என்பது ஒரு நகைமுரண்.
ஓர் எஃகு ஆலை சுயசார்புள்ளதாக இருக்கவேண்டுமென்றால், அதற்கென்று சொந்தமாக இரும்புத்தாது களங்கள் இருக்க வேண்டும். எஃகு அமைச்சகம், தெலங்கானாவின் கம்மம் மாவட்டத்தில் இருக்கும் பையராம் இரும்புத்தாதுச் சுரங்கங்களை விசாகப்பட்டினம் எஃகு ஆலைக்கு ஒதுக்கீடு செய்யத் தயாராக இருப்பதாக 2013-ல் அறிவித்தது.
ஆயினும், இன்றைய தேதிவரை அது சம்பந்தமாக எந்தவொரு பின்நிகழ்வும் இல்லை. எஃகு ஆலை, இரும்புத்தாதை வெளிப்படையான சந்தை விலையில் ஒரு டன்னுக்கு ரூபாய் 5,200 கொடுத்து வாங்கியதால் ஏற்பட்ட நஷ்டங்களுக்கு மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.
தனியார்வசம் ஆலை சென்றாலும் கூட, சொந்தமான, சகாயவிலையில் கிடைக்கும் இரும்புச் சுரங்கங்கள் இல்லை என்றால், ஆலையால் லாபம் சம்பாதிக்க முடியாது. 2017-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட தேசிய எஃகுக் கொள்கையின் இலக்குகள் நிறைவேற வேண்டும் என்றால், முதலில் விசாகப்பட்டினம் எஃகு ஆலையைத் தனியார்மயமாக்கும் திட்டத்தைக் கைவிட்டு, ஆலையை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.