'கோ கரோனா கோ' என்ற முழக்கத்தைக் கூறி நாடு முழுவதும் பிரபலம் அடைந்தவர் இந்திய குடியரசுக் கட்சித் தலைவரும், மத்திய இணை அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே. தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறி சமூக வலைதளங்களில் பேசும்பொருளாக நீடித்துவரும் அவர் தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு அறிவுரை கூற வாய்ப்பிருந்தால் தொலைபேசி வழியே பேசுவேன் எனக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக நாசிக்கில் ஊடகவியலாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருந்தேன். அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை அவர் ஏற்க மறுத்துள்ளார். ட்ரம்ப் தோல்வியை ஒப்புக்கொண்டு அடுத்த தேர்தலில் வெற்றிபெற முயற்சித்திருக்க வேண்டும்.
ஆனால் அவ்வாறு செய்வதற்குப் பதிலாக குடியரசு என்னும் மக்களாட்சித் தத்துவத்தை ட்ரம்ப் அவமதித்துள்ளார். அவர் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர் என தன்னை அழைத்துக்கொள்ளும் உரிமையை இழந்துவிட்டார்.
ஆட்சியதிகார மாற்றத்தை மக்கள் விரும்பியுள்ளனர். ஜனநாயகத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் அவர் அதனை நிராகரித்துள்ளார். உலகளாவிய அக்கறைகொண்ட விஷயங்களில் கருத்துரைப்பவன் என்ற வகையில் முடிந்தால் ட்ரம்புடன் தொலைபேசியில் இது தொடர்பாகப் பேசுவேன்” எனக் கூறியுள்ளார்
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...