டெல்லி : லக்கிம்பூர் கேரி வன்முறை தொடர்பாக பாஜக எம்பி வருண் காந்தி பகிர்ந்துள்ள காணொலி காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
அந்தக் காணொலி தொடர்பான பதிவில், “லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் மீது கார் ஏறிய காணொலி அனைவரின் நெஞ்சையும் உலுக்கும் வகையில் உள்ளது. இந்த விவகாரத்தில் உடனடி கைது நடவடிக்கை தேவை” என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், “காணொலி காட்சி மிகத் தெளிவாக உள்ளது. கொலை மூலம் போராட்டக்காரர்களை அமைதியாக்க முடியாது. ஒவ்வொரு விவசாயியும் கொந்தளித்து எழும் முன்னர், இந்த அப்பாவி விவசாயிகளின் கொலை மற்றும் இரத்தத்திற்கு காரணமானவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை (அக்.3) சர்ச்சைக்குரிய 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக போராடினார்கள். அப்போது உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் விவசாயிகள் மீது காரை ஏற்றினார் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.