டெல்லி: குஜராத் சட்டமன்றத் தேர்தலில் கடந்த 37ஆண்டுகளில் இல்லாத வரலாற்று தோல்வியை காங்கிரஸ் தழுவியது. 182 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக நடந்த தேர்தலில் 156 இடங்களைக் கைப்பற்றி பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 17 இடங்களை மட்டும் கைப்பற்றி படுதோல்வியைச் சந்தித்தது.
தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது, "தோல்வியை ஏற்றுக் கொள்கிறோம். ஜனநாயக நாட்டில் வெற்றி, தோல்வி என்பது நிரந்தரம் இல்லாதது. தேர்தல் தோல்வியை மதிப்பாய்வு செய்து குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்போம்’’ என்றார்.
அதேநேரம், எங்கள் கருத்தியல் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்றும்; தொடர்ந்து போராட உள்ளதாகவும் கூறினார். குஜராத் சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து மேற்கு மாநிலங்களில் காங்கிரஸ் செய்யும் தவறுகளை தவிர்க்க நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கார்கே கூறினார்.
இம்மாச்சலப்பிரதேசத்தில் வெற்றி கண்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கார்கே தெரிவித்தார். மேலும் வெற்றியை பெற்றுத் தந்த காங்கிரஸ் வேட்பாளர்கள், செயலாளர்கள், பொறுப்பாளர்கள், மாநிலத் தலைவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.
சிம்லா சென்று காங்கிரஸ் வெற்றி வேட்பாளர்களை சந்திக்க உள்ளதாகத் தெரிவித்த கார்கே, முதலமைச்சர் தேர்வு குறித்து எம்.எல்.ஏ.க்களுடன் கலந்து ஆலோசிக்க உள்ளதாகத் தெரிவித்தார். கடந்த அக்டோபர் 26ஆம் தேதி காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே பதவியேற்றுக் கொண்ட நிலையில், அவரது தலைமையில் காங்கிரஸ் குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொண்டது.