புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியிலிருந்து 4 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களின் எம்எல்ஏ பதவிகளை அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். இதனால், காங்கிரஸுக்கு 14 எம்எல்ஏக்கள், எதிர்க்கட்சிக்கு 14 எம்எல்ஏக்கள் என சம நிலையில் உள்ளனர்.
ஆளும் காங்கிரஸ் அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பிப்ரவரி 18ஆம் தேதி ஆளுநரிடத்தில் மனு அளித்திருந்தனர். இதையடுத்து, புதிதாக பொறுப்பேற்ற துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பிப்ரவரி 22ஆம் தேதி மாலை 5 மணிக்குள் முதலமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டார்.
துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இதனை அடுத்து சட்டப்பேரவையின் ஒரு நாள் சிறப்பு கூட்டம் நாளை (பிப்.22) காலை 10 மணிக்கு நடைபெறும் என சட்டப்பேரவை செயலாளர் முனிசாமி அறிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் முதலமைச்சர் நாராயணசாமி பெரும்பான்மையை நிரூபிக்க 15 இடங்கள் தேவை என்ற நிலையில், ஆளுநர் தமிழிசை உத்தரவின் பேரில் எம்எல்ஏ-க்களுக்கு காவல் துறையினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஏற்கெனவே காவல்துறையினர் பாதுகாப்பு உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் பாதுகாப்பு கூடுதலாக போடப்பட்டுள்ளது.
ஆளும்கட்சி, எதிர்க்கட்சி எம்எல்ஏ-க்களுக்கு காவல்துறை பாதுகாப்பு இதில், அதிமுக கொறடாவும், முத்தியால்பேட்டை தொகுதியின் உறுப்பினருமான வையாபுரி மணிகண்டன், தட்டாஞ்சாவடி தொகுதி திமுக எம்எல்ஏ வெங்கடேசன் உள்ளிட்ட ஆளும்கட்சி, எதிர்க்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க இருக்கும் நிலையில், குதிரை பேரம் நடப்பதை தடுக்கும் பொருட்டு இந்த பாதுகாப்புக்கு நடவடிக்கை காவல்துறை சார்பில் எடுக்கப்பட்டுள்ளது.
பாஜகவின் ஆட்சிக் கவிழ்ப்பு வேலையை நாங்கள் கண்டிப்பாக முறியடிப்போம். நம்பிக்கை வாக்கெடுப்பில் நியமன உறுப்பினர்கள் 3 பேர் (பாஜக) கலந்துகொள்ள உரிமையில்லை என்பது எங்களுடைய கருத்து என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்திருக்கிறார்.