உத்தரகாண்ட்:உத்தரகாண்ட் மாநிலத்தில், 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எணணிக்கை இன்று(மார்ச்.10) நடைபெற்று வருகிறது.
வரலாற்றை முறியடித்த பாஜக..!
இதுவரை உத்தரகாண்ட் மாநிலத்தில், எந்த ஒரு கட்சியும் தொடர்ந்து இருமுறை ஆட்சியைப் பிடித்ததாக வரலாறு இல்லை. இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக இரண்டாவது முறையாக மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. இதன்மூலம் உத்தரகாண்டில் தொடர்ந்து வந்த தேர்தல் வரலாற்றை பாஜக முறியடித்துள்ளது .
உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் தாமி, காத்திமா தொகுதியில் போட்டியிட்டார். இதில் வெற்றி பெற்றிருந்தால் அத்தொகுதியில், ஹாட்ரிக் வெற்றி பெற்றவர் என்ற சிறப்பும் தாமியைச் சேர்ந்திருக்கும். ஆனால், தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் புவன் சந்திர காப்ரியிடம் 6,549 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
அதேபோல், உத்தரகாண்டில் இதுவரை கல்வி அமைச்சராக ஆட்சியில் இருந்த யாரும் அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றதில்லை. அந்த வரலாறும் நடப்பு ஆட்சியின் கல்வி மற்றும் விளையாட்டு அமைச்சர் அரவிந்த் பாண்டேவால் முறியடிக்கப்பட்டுள்ளது. கதார்புர் தொகுதியில் போட்டியிட்ட இவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பிரேமானந்த் மஹாஜனை பின்தள்ளி வெற்றி பெற்றார்.
இப்படி உத்தரகாண்டில் நிலவும் பல்வேறு நம்பிக்கைகளில் ஒன்று உத்தர்காசி மாவட்டத்தைச் சார்ந்த கங்கோத்ரி தொகுதி நம்பிக்கை. இதுவரை கங்கோத்ரி தொகுதியில் வெற்றி பெறும் கட்சியே உத்தரகாண்டில் ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்படி, இந்தத் தேர்தலில் அத்தொகுதியில் போட்டியிடும் சுரேஷ் சவுஹன் வெற்றி பெற்றதன் மூலம் அந்த நம்பிக்கை மட்டும் முறியடிக்காமல் நீடிக்கிறது.
இதையும் படிங்க:மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு; பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து