டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன் கடந்த 1991ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். கொலையாளிகளுக்கு பேட்டரி வாங்கி கொடுத்ததாக, பேரறிவாளனை சிபிஐ சிறப்பு புலனாய்வு பிரிவு கைது செய்தது. இந்த வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேல் பேரறிவாளன் சிறையில் உள்ளார்.
கடந்த 2014ஆம் ஆண்டு பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு அவருக்கு அவ்வப்போது பரோலும் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பல்வேறு சட்ட நடைமுறைகளுக்குப் பிறகு அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், தன்னை விடுவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் தாக்கல் செய்த மனு இன்று (ஏப்.27), நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, எழுவர் விடுதலைக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்தும், ஆளுநர் முடிவெடுக்காமல் தாமதித்து வருவதாக பேரறிவாளன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்குத்தான் அதிகாரம் உள்ளது என்றும், எழுவர் விடுதலை தொடர்பான கோப்புகள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுவிட்டதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.