கரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால், குழந்தைகளின் கல்வி மட்டும் பாதிக்கப்படவில்லை. அவர்களுக்கு கிடைத்து வந்த ஊட்டச்சத்திலும் குறைபாடு ஏற்பட்டுள்ளது. தேசிய மதிய உணவு திட்டம் என்பது அரசு பள்ளிக்கு வரும் குழந்தைகளின் வருகையை அதிகரிக்கவும், அவர்களுக்கு ஊட்டச்சத்தை அளிக்கவும் திட்டமிடப்பட்டதாகும். இதன் கீழ் 11.59 கோடி அரசு பள்ளி குழந்தைகள் உணவு பெறுகின்றனர்.
கரோனா சூழலில் மாநில அரசுகள் உணவு தானியங்களை வழங்கினாலும், அவை குழந்தைகள் ஊட்டச்சத்து பெற போதுமானதாக இல்லை. திட்டங்களை வகுப்பதிலும், நிதி ஒதுக்குவதிலும் உள்ள சிக்கலே இதற்கு முக்கிய காரணமாகும். இந்த சிக்கல் முன்பே இருந்தாலும், கரோனா காலத்தில் இது பூதாகரம் ஆகியுள்ளது. இதை சீக்கிரம் சரி செய்யாவிட்டால், இந்த நெருக்கடி காலத்தில் நாம் மேலும் நெருக்கடியை சந்திக்க நேரும்.
2020 மார்ச், பள்ளிகள் மூடப்பட்டு மதிய உணவுத் திட்டம் நிறுத்தப்படுவதால் ஏற்படும் அபாயம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிமன்றம், உணவு பாதுகாப்பை உறுதி செய்ய கேட்டுக்கொண்டது. இதன்பிறகு மனிதவள மேம்பாட்டுத் துறை, குழந்தைகளுக்கு சமைக்கப்பட்ட உணவை வீடுகளுக்கு அனுப்ப வேண்டும் அல்லது உணவு பாதுகாப்புக்கு நிதியளிக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியது.
இதன்படி, பிகாரில் உணவு பாதுகாப்புக்கு பணம் அளிக்கப்பட்டது. ராஜஸ்தான், தெலங்கானா போன்ற மாநிலங்களில் உணவு தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் உள்ளிட்ட பொருள்களை வழங்கின. பால், முட்டை உள்பட முழு உணவையும் கேரளா போல் சில மாநிலங்கள் வழங்கின. கரோனா இல்லாத சூழலில், கோடை கால விடுமுறையின் போது குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படாது. ஆனால், இந்த முறை உணவு வழங்க வேண்டிய சூழல் என்பதால், சில ஒப்புதல்களை பெற வேண்டியது அவசியமானது.
இப்படி பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அரசு தரப்பில் இருந்து தகவல் வெளியானாலும், உண்மையில் பல குழந்தைகள் உணவுப் பற்றாக்குறையால் அவதிப்பட்டதாக சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆக்சிபேம் எனும் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒடிஷா, பிகார், ஜார்கண்ட், சட்டீஸ்கர், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 35% குழந்தைகளுக்கு மதிய உணவு முறையாக கிடைக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 92% குழந்தைகளுக்கு உணவு கிடைக்கவில்லை.
இது பற்றி முழுமையாக அறிய, மதிய உணவு திட்டம் என்ன மாதிரியான தடைகளை சந்திக்கிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். அதேபோல் இத்திட்டத்தால் பயனடைபவர்கள் யார் என்பதை கண்டறிந்து அதற்கேற்ப நிதி ஒதுக்கீடு மற்றும் பிற தகவல்களை ஆராய வேண்டும்.
மதிய உணவு திட்டத்துக்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து நிதி ஒதுக்குகின்றன. சமையல் செலவு, சமயலறை கட்டமைப்புக்கான செலவு உள்ளிட்டவற்றுக்கு மத்திய அரசு 60% நிதி ஒதுக்குகிறது. உணவு தானியங்களுக்கான மொத்த செலவையும் மத்திய அரசு ஏற்கிறது.