பெங்களூரு:பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில், பிற்பகல் 2.30 மணி நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 115 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 17 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. 55 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள பாஜக, 12 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பெரும்பான்மையை விட கூடுதல் இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளதால் மாநிலம் முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், காங்கிரஸின் புதிய முதலமைச்சர் யார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. முதலமைச்சர் பதவிக்கு முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் இடையே கடும்போட்டி நிலவுகிறது. 1983ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் முதல்முறையாக வெற்றி பெற்று, சித்தராமையா சட்டமன்ற உறுப்பினர் ஆனார். 1994ம் ஆண்டு ஜனதா தளம் கட்சியுடனான கூட்டணி ஆட்சியின்போது துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். 2013ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை முதலமைச்சராக பதவி விகித்தார். இதனால், சித்தராமையா மீண்டும் முதலமைச்சராக தேர்வு செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.