சென்னை:உலகமெங்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கரோனா தொற்றை முறியடிக்க தடுப்பு மருந்துகள் கண்டறியப்பட்ட போதிலும், கரோனா தொற்று மரபணு மாற்றம் அடைந்து புதிய வகையாக தொடர்ந்து பரவி வருகிறது. ஏற்கனவே டெல்டா, ஒமிக்ரான் என பல வகைகளில் கரோனா தொற்று உருமாறி பரவிய நிலையில், தற்போது மீண்டும் ஒரு புதிய வகை கரோனா தொற்று பல நாடுகளிலும் வேகமாகப் பரவி வருகிறது.
சீனாவிலும், சிங்கப்பூரிலும் இந்த புதுமாதிரி கரோனா ஜேஎன்.1 (JN.1) துணை மாதிரி தொற்று கண்டறியப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவிலும் புதுமாதிரி கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இந்தியாவில் இந்த புதுமாதிரி கரோனா தொற்று பரவல் வேகம் எடுத்துள்ள நிலையில், கேரளாவில் அதிக அளவிலான பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. கேரளாவில் புதிய கரோனா தொற்று பரவல் அதிகம் கண்டறியப்பட்ட நிலையில், அங்கு உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டு உள்ளது.
கேரளாவில் புதுமாதிரி கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழக எல்லைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மேலும் சுகாதாரத்துறை, மருத்துவமனைகளை உஷார்படுத்தி உள்ளது. மேலும் தெலங்கானா, கர்நாடகா, உத்தரகாண்ட் மாநிலங்களிலும் சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்து, மக்கள் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுமாறு எச்சரித்துள்ளது.
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு (WHO) புதிதாக பரவி வரும் ஜேஎன்.1 (JN.1) கரோனா தொற்று BA.2.86-இன் ஒரு துணை மாதிரி என தெரிவித்துள்ளது. மேலும் இந்த புதிய வகை கரோனாவினால் அதிகளவில் பாதிப்பு ஏற்படாது எனவும் தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, குளிர்காலம் தொடங்கும் பகுதிகளில் இந்த புதிய ஜேஎன்.1 (JN.1) கரோனா தொற்று சுவாசப் பாதிப்புகளை அதிகரிக்கக் கூடும் எனவும் எச்சரித்து உள்ளது.
மேலும், ஏற்கனவே புழக்கத்தில் உள்ள கரோனா தடுப்பூசிகள் இந்த புதிய உருமாற்றம் அடைந்த கரோனாவிற்கு எதிராகவும் போராடக்கூடிய வல்லமை கொண்டிருப்பதாகவும், நோய் எதிர்ப்பு மற்றும் உயிரிழப்பில் இருந்து பாதுகாப்பு அளிப்பதாகவும் தெரிவித்து உள்ளது. மேலும் உலக சுகாதார அமைப்பு இந்த புதிய உருமாற்றம் அடைந்த கரோனா தொற்று பரவலை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் தெரிவித்து உள்ளது.
இந்தியாவில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகளுக்கு முன்பாகவே கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பண்டிகை காலங்களில் மேலும் இந்த தொற்று பரவல் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதனால் மக்கள் மூகமூடி அணிவதற்கும், கூட்ட நெரிசல் உள்ள இடங்களைத் தவிர்க்குமாறும் பல மாநிலங்கள் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளன. இந்தியாவில் சில மாநிலங்களில் புதிய கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், அவற்றின் நிலையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆய்வு செய்வார் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தாமிரபரணி வெள்ளம்.. விமானப்படை, கடற்படையினர் மீட்புப் பணியில் தீவிரம் - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்