பஞ்சாப் :சீக்கியர்களுக்கு என தனி நாடு என்ற கோஷம் பல ஆண்டுகளாக ஒலித்து வருகிறது. தங்களுக்கு தனி நாடு வழங்க வேண்டும் என காலிஸ்தான் அமைப்பைச் சேர்ந்த பிரிவினைவாதிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஒன்று தான் வாரீஸ் டி பஞ்சாப் என்ற அமைப்பு.
பஞ்சாப் நடிகர் தீப் சித்து தான் வாரீஸ் டி பஞ்சாப் என்ற இந்த அமைப்பை துவக்கி வைத்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு அரியானா மாநிலம் கார்கோடா பகுதியில் நடந்த விபத்தில் தீப் சித்து உயிரிழந்தார். இதையடுத்து அமிர்த் பால் சிங் இந்த அமைப்பை வழி நடத்தத் தொடங்கினார். அதற்கு முன் வரை பஞ்சாப் போலீசார் அம்ரீத் பால் சிங் குறித்து அறிந்து இருக்க வாய்ப்பில்லை.
அரபு நாடுகளில் பணிபுரிந்து வந்த அம்ரித் பால் சிங், மீண்டும் சொந்த ஊர் திரும்பி காலிஸ்தான் அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். வாரீஸ் டி பஞ்சாப் அமைப்பில் சேர்ந்த அம்ரித் பால் சிங் மெல்ல அந்த அமைப்பின் தலைவராக தேர்வாகும் அளவுக்கு தன் செல்வாக்கை உயர்த்திக் கொண்டார்.
இதனிடையே அம்ரித் பால் சிங்கின் கூட்டாளி லவ் பிரீத்தை, கடத்தல் வழக்கு ஒன்றில் போலீசார் கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்ட லவ் பிரீத்தை விடுதலை செய்யக் கோரி, பயங்கர ஆயுதங்களுடன் அம்ரித் பால் சிங் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் பஞ்சாப் போலீசார் பலருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போதைய நிலையை சரி செய்ய சிறையில் இருந்த லவ் பிரீத்தை போலீசார் விடுவித்தனர். இதையடுத்து அம்ரித் பால் சிங்கின் நடவடிக்கைகளை கண்காணித்த போலீசார், அவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். இதனிடையே கடந்த மார்ச் 18 ஆம் தேதி அம்ரித் பால் சிங்கை, போலீசார் கைது செய்ய முற்பட்ட போது, அவர் தப்பி தலைமறைவாகினார்.
இதையடுத்து பஞ்சாப்பில் கலவரம் ஏற்பட வாய்ப்பு இருப்பதை கருதிய போலீசார், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டனர். இணைய சேவைகள் முடக்கப்பட்டன. பதற்றம் அதிகம் காணப்படும் இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு போலீசார் கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனர்.
மேலும் தலைமறைவான அம்ரித் பால் சிங்கை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், அம்ரித் பால் சிங்கின் தந்தை தர்சம் சிங் பஞ்சாப் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். தன் மகன் அம்ரித் பால் சிங்கை போலீசார் கைது செய்து விட்டதாகவும், அது குறித்த உண்மையை வெளியே சொல்லாமல் தவிர்த்து வருவதாகவும் அவர் மனுவில் தெரிவித்து இருந்தார்.
மனு குறித்து பஞ்சாப் உயர் நீதிமன்றம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே அம்ரித் பால் சிங்கின் மாமா, கார் ஓட்டுநர், உறவினர் ஹர்ஜித் சிங், அவரது உதவியாளர்கள் தல்ஜித் சிங் கல்சி, பசந்த் சிங், குர்மீத் சிங் மற்றும் பகவந்த் சிங் ஆதரவாளர்களை போலீசார் கைது செய்தனர்.
அம்ரித் பால் சிங்கை தேடப்படும் குற்றவாளியாக போலீசார் அறிவித்தனர். அம்ரித் பால் சிங் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநாடுகளில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். லண்டனில் காலிஸ்தான் அமைப்பைச் சேர்ந்த ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபனர்.
பிரிட்டன் மட்டுமின்றி அமெரிக்கா, கனடா நாடுகளிலும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய தூதரங்களை முற்றுகையிட்ட அவர்கள் அங்கு கலவர தாக்குதலில் ஈடுபட்டும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர். இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த மத்திய வெளியுறவு அமைச்சகம், சம்பவம் குறித்து அறிக்கை அளிக்கக் கோரி அந்ததந்த நாட்டு வெளியுறவு அமைச்சகங்களுக்கு கடிதம் எழுதியது.
காலிஸ்தான் போராட்டங்களை ஊக்குவிக்கும் விதமாக டெல்லி சாலையில் கண்ணாடி மற்றும் ஜாக்கெட்டுன் அம்ரித் பால் சிங் சுற்றித் திரிவது மற்றும் ஆதரவாளர்களுக்காக அவர் பேசிய வீடியோ வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. நேபாளத்திற்கு அம்ரித் பால் சிங் தப்பிச் சென்றதாக கூறப்பட்ட நிலையில் இரு நாட்டு எல்லை மற்றும் நாட்டின் 5 மாநிலங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இதனிடையே வெளிநாடு தப்பிச் செல்ல இருந்த அம்ரித் பால் சிங்கின் மனைவி கிரண்தீப் கவுரை பஞ்சாப் போலீசார் மடக்கிப் பிடித்தனர். அமிர்தசரஸ் விமான நிலையத்தில் விமானம் மூலம் கிரண்தீப் கவுர் லண்டன் தப்பிச் செல்ல திட்டமிட்டு இருந்தார். அமிர்தரசஸ் விமான நிலையத்திற்கு விரைந்த போலீசார், லண்டன் செல்லும் விமானத்தில் பயணிக்க இருந்த கிரண்தீப் கவுரை மடக்கிப் பிடித்தனர்.
கிரண்தீப் கவுரிடம் அவரது கணவர் அம்ரித் பால் சிங் குறித்து பஞ்சாப் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அம்ரித் பால் சிங்கை கைது செய்ததாக பஞ்சாப் போலீசார் தெரிவித்து உள்ளனர். பஞ்சாப்பின் மோகா பகுதியிகல் அம்ரித் பால் சிங் சரணடைந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக பஞ்சாப் போலீசார் கூறுகையில், கடந்த மார்ச் 18 ஆம் தேதி முதல் தேடப்பட்டு வந்த வாரீஸ் டி பஞ்சாப் அமைப்பின் தலைவர் அம்ரித் பால் சிங், தற்போது பஞ்சாப் மாநிலம் மோகாவில் சரணடைந்ததாக தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க :அம்ரித் பால் சிங் கைது! பஞ்சாப் போலீசிடம் சரணடைந்ததாக தகவல்!