பஞ்சாப் மாநில போலீசாரால் தீவிரமாக தேடப்பட்டு வரும் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங்கை நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில மாதங்களுக்கு முன்பு வரையில் வாரிஸ் பஞ்சாப் டி (பஞ்சாப்பின் வாரிசுகள்) என்னும் ஏதோவொரு அமைப்பின் தலைவராக மட்டுமே அறியப்பட்ட அம்ரித்பால் சிங், எப்படி அச்சுறுத்தும் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவராக உருமாறினார்.
இவருக்கு ஆதரவாக பல்வேறு நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் முன்பாக சீக்கியர்கள் எதற்காக போராட்டங்களை நடத்துகின்றனர். காலிஸ்தான் என்னும் தனி நாடு கோரி ஆயுதம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு இந்திரா காந்தி அரசால் கொல்லப்பட்ட பிரிவினைவாதி ஜர்னைல் சிங் பிந்த்ரன்வாலேவுக்கு நிகராக இவர் போற்றப்பட காரணம் என்ன. இப்படி பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கிறது இந்த "மோஸ்ட் வான்டட் கிரிமினல்"அம்ரித்பால் சிங் தொகுப்பு.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே உள்ள ஜல்லுபூர் கேரா என்னும் கிராமத்தில் 1993ஆம் ஆண்டு பிறந்தார் அம்ரித்பால் சிங். இவர் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பு வரையில் பஞ்சாப் மாநிலத்தில் இருந்தார். அதன்பின் துபாயில் உள்ள தனது மாமாவின் போக்குவரத்து நிறுவனத்தில் பணிபுரிய சென்றார். பல ஆண்டுகளாக அங்கேயே இருந்து எப்போதாவது மட்டுமே இந்தியாவுக்கு வந்து செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தார். அந்த வகையில் 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் துபாயில் இருந்து இந்தியா திரும்பிய அவர் சீக்கியர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதை பிரதானமாக செய்யத் தொடங்கினார். சீக்கியர்களை போல தோற்றத்தை மாற்றத் தொடங்கினார்.
ஆங்காங்கே, வன்முறை சம்பவங்களிலும் ஈடுபட்டு வந்தார். இதனிடையே வாரிஸ் பஞ்சாப் டி (பஞ்சாப்பின் வாரிசுகள்) என்னும் அமைப்பிற்கு தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த அமைப்பானது பஞ்சாபி நடிகரும், சமூக ஆர்வலருமான தீப் சித்துவால் தொடங்கப்பட்டதாகும். இந்த அமைப்பின் மூலம் தனது ஆதரவாளர்களுடன் பல்வேறு போராட்டங்களில் பங்கெடுக்க தொடங்கினார் அம்ரித்பால் சிங். அதில் மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டங்களும் அடங்கும். இந்த போராட்டங்களில் ஏற்பட்ட வன்முறைகளுக்கும் இவருக்கும் தொடர்பு இருப்பதாக பல்வேறு வழக்குகள் உள்ளன.
இதனிடையே வாரிஸ் பஞ்சாப் டி அமைப்பை தொடங்கிய தீப் சித்து 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கார் விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து அந்த அமைப்பின் முழு கட்டுப்பாடும் அம்ரித்பால் சிங்கின் கைகளுக்கு வந்தது. இதையடுத்து அம்ரித்பால் சிங் சீக்கியர்கள் விவகாரத்தில் மும்முரமாக களமிறங்கி அவர்களது கவனத்தையும், ஆதரவையும் பெற்றார். அந்த வகையில் 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சீக்கிய மத ஊர்வலத்தை நடத்தினார்.
பஞ்சாப் மாநிலத்தில் நிலவி வரும் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சாதி ரீதியான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஊர்வலம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். இந்த ஊர்வலத்தில் எழுப்பட்ட கோஷங்கள் காரணமாக போலீசாருக்கும் சீக்கியர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்போதில் இருந்து போலீசாருக்கு இடையூறு கொடுப்பவராக உருமாறினார்.