ஹைதராபாத்: கடந்த 2004ஆம் ஆண்டு மக்கள் போர் அமைப்பு மற்றும் மாவோயிஸ்ட் ஆகியோர் இணைந்து மாவோயிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டது. மார்க்சிசம், மாவோயிசம், லெனினிசம் ஆகிய கொள்கைகளை அடிப்படையாக கொண்டு மாவோயிஸ்ட் கட்சி அறிவிக்கப்பட்டது. தெற்காசிய மாவோயிஸ்ட் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழு எனப்படும் கம்போசாவில் (COMPOSA) இந்த கட்சிகள் அங்கம் வகித்தன.
நேபாளம், வங்காளதேசம், மியான்மர், இலங்கை, பிலிப்பைன்ஸ், ஜெர்மனி, பிரான்ஸ், துருக்கி, இத்தாலி உள்ளிட்ட நாடுகளுடன் மாவோயிஸ்ட் கட்சி இணக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் இருந்து, மாவோயிஸ்ட் கிளர்ச்சி படையினருக்கு போர் பயிற்சி அளிக்கப்பட்டதாக ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதாக மத்திய அரசால் மாவோயிஸ்ட் கட்சி, பயங்கரவாத தடை சட்டமான உபாவில் தடை செய்யப்பட்டது. மேலும் பல்வேறு மாநிலங்களிலும் மாவோயிஸ்ட் கட்சிக்கு தடை அறிவிக்கப்பட்டதை அடுத்து, வெட்டவெளி அரசியலில் இருந்து அந்த அமைப்பு பின் வாங்கியதாக கூறப்படுகிறது.
மேலும் கடந்த 2005 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் முக்கியத் தலைவர்கள் கைது மற்றும் என்கவுன்ட்டர் உள்ளிட்ட காரணங்களால் மாவோயிஸ்ட் கட்சி பின்னடைவை சந்தித்து வருகின்றன. மாவோயிஸ்ட் கட்சியின் தலைவர் கோபத் காந்தி 2009ல் கைது, 2010ஆம் ஆண்டு அடிலாபாத் வனப்பகுதியில் ஆசாத் என்கவுன்ட்டர், மற்றும் கிஷன்ஜி துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட சம்பவங்களால் மாவோயிஸ்ட் கட்சி மறைவு வாழ்க்கைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டது. மேலும் வெளிநாட்டு கிளர்ச்சி அமைப்புகளுடனான அந்தக் கட்சியின் உறவும் ஏறத்தாழ துண்டிக்கப்பட்டன.