பிசிசிஐயின் தலைவரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி, இன்று கொல்கத்தாவில் உள்ள வீட்டில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, உடனடியாக கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சையளிக்கப்பட்டு, மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கங்குலியின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிய மத்திய இணை நிதியமைச்சர் அனுராக் தாக்கூர் இன்று (ஜன. 04) டெல்லியிலிருந்து விமானம் மூலமாக கொல்கத்தா வந்தடைந்தார்.
அப்போது நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அனுராக் தாக்கூர், “இந்நாட்டின் ஒரு முக்கிய அங்கமாக மேற்கு வங்கம் உள்ளது. பல்வேறு துறைகளில் மிகச்சிறந்த சாதனையாளர்களை நாட்டிற்கு மேற்கு வங்கம் வழங்கியுள்ளது.
அத்தகைய மேற்கு வங்கத்திற்கு வரும் மத்திய அரசின் அமைச்சர் ஒருவரை வெளியார் என்று அழைத்தால், எந்த இடத்தைச் சேர்ந்தவர்களை உள்நாட்டினராக அவர்கள் கருதுவார்களென நான் கேள்விக் கேட்க விரும்புகிறேன். இந்தியாவின் குடிமக்கள் தாங்கள் விரும்பும் எந்தவொரு பகுதியிலும் குடியேறி வாழலாம், இது அரசியலமைப்பு தந்த உரிமை. மத்திய அமைச்சர் ஒருவர் இம்மாநிலத்திற்கு வருகைதருவது குற்றமா எனச் சிந்திக்கிறேன்.
மத்திய இணை நிதியமைச்சர் அனுராக் தாக்கூர் சக குடிமகனை வெளியார் என முத்திரை குத்துவது தவறு. அத்தகைய தவறான சிந்தனைப்போக்கு மேலும் வளர அனுமதிக்கப்பட வேண்டுமா அல்லது சீர்செய்யப்பட வேண்டுமா என்பதை மக்கள் முடிவுசெய்வார்கள்” எனத் தெரிவித்தார்.
எதிர்வரும் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவுள்ள மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க பாஜக, "வெளியாரை" அழைத்துவருகிறதென அம்மாநிலத்தை ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியிருந்தது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க :கேரளாவில் பறவைக் காய்ச்சல் உறுதி