பெங்களூரு: பாஜகவின் தென்மாநில நுழைவு வாயிலான கர்நாடகத்தில் பிஎஸ் எடியூரப்பா மீண்டும் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
இதற்கிடையில் உள்கட்சி பிரச்சினை, நிர்வாக சீர்கேடு, அமைச்சர்களின் சிடி விவகாரம், மேகதாது சச்சரவு என சிக்கித் தவிக்கிறார் பி.எஸ். எடியூரப்பா.
அவருக்கு எதிராக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் சில மூத்தத் தலைவர்களும் போர்க்கொடி தூக்கிவருகின்றனர்.
இதற்கிடையில் சில வாரங்களுக்கு முன்பு எடியூரப்பா டெல்லி சென்று பிரதமர், உள்துறை அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர் மற்றும் பாஜக தேசியத் தலைவர் ஜெபி நட்டா ஆகியோரை தனித்தனியே சந்தித்தார்.
இதனால் அவர் பதவி விலகப் போகிறார் என்ற தகவலும் காட்டுத்தீப் போல் பரவியது. இதனைத் திட்டவட்டமாக மறுத்த பி.எஸ். எடியூரப்பா இல்லை... இல்லவே இல்லை...என சத்தியம் செய்யாத குறையாக மறுத்தார்.
எடியூரப்பா தலைவிதி, இன்று தெரியும்! இந்நிலையில் பி.எஸ். எடியூரப்பா ஜூலை 26ஆம் தேதி பதவி விலகுகிறார் எனத் தகவல்கள் வெளியாகின. இந்தத் தகவலை மெய்ப்பிக்கும் விதமாக நாளை உங்களுக்கு தெரியும் என நேற்று (ஜூலை 25) கூறியுள்ளார்.
பி.எஸ். எடியூரப்பா பதவி விலகும்பட்சத்தில் பிரகலாத் ஜோஷி அல்லது பசவராஜ் பொம்மாய் ஆகிய இருவரில் யாராவது ஒருவர் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படலாம் எனவும் யூகங்கள் வெளியாகியுள்ளன. எனினும் இந்த யூகங்களை மாநில உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மாய் மறுத்துள்ளார்.
இதையும் படிங்க : ஐந்தே நாளில் எடியூரப்பா ராஜினாமா?