டெல்லி:பிரதமர் மோடி, அமெரிக்கா மற்றும் எகிப்து நாடுகளுக்கு மேற்கொண்டு இருந்த 6 நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு, ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 25) இரவு, டெல்லி திரும்பினார். இந்த சுற்றுப்பயணத்திடையே, பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இந்தியா திரும்பிய பிரதமர் மோடிக்கு, டெல்லி விமான நிலையத்தில், மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி, பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ஜே.பி. நட்டா, முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன், கட்சி எம்.பி.,க்கள் கவுதம் காம்பீர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு இந்தியா திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் என்ன நடக்கிறது என்று பாஜக தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் பிற தலைவர்களிடம் கேட்டு அறிந்தார். விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்கச் சென்ற பாஜக எம்.பி. மனோஜ் திவாரி கூறியதாவது, “இங்கே எப்படி இருக்கிறது என்று பிரதமர் மோடி, நட்டாவிடம் கேட்டதற்கு, கட்சித் தலைவர்கள், பாரதிய ஜனதா கட்சியின் ஒன்பது ஆண்டு கால சாதனைகளை, அறிக்கைகளாக, மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டு உள்ளதாக தெரிவித்த நட்டா, நாடும் மகிழ்ச்சியாக இருப்பதாக குறிப்பிட்டு உள்ளார்’ என்றார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பாரதிய ஜனதா கட்சி எம்.பி., பர்வேஷ் வர்மா கூறியதாவது, நாட்டில் என்ன நடக்கிறது என்றும், கட்சியின் பொதுச் செயல்திட்டம் எப்படி நடக்கிறது என்றும் பிரதமர் மோடி கேட்டறிந்தார். அவரிடம் தகுந்த பதில்களை தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டு உள்ளார்.
ஜூன் 20ஆம் தேதி, அமெரிக்கப் பயணத்தைத் தொடங்கிய பிரதமர் மோடி, நியூயார்க்கில், ஜூன் 21ஆம் தேதி, 9வது சர்வதேச யோகா தினத்தை நினைவுகூரும் வகையில், ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் நடைபெற்ற வரலாற்று நிகழ்வுக்குத் தலைமை தாங்கினார். பின்னர், வாஷிங்டன் சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.