டெல்லி: டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் மற்றும் மீட்புப் பணிகளில் மத்திய அரசின் பங்கு என்ன என்பது குறித்து விளக்கம் அளித்தார்.
தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என டிசம்பர் 12-ஆம் தேதி முதல் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. மழை பாதித்த அன்று கூட 3 மணி நேரத்துக்கு ஒரு முறை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. ஆனால், அதனை மாநில அரசும், அமைச்சர்களும் பொருட்படுத்தவில்லை. அதைவிடுத்து இன்ச் பை இன்ச் எவ்வளவு? மழை பெய்யும் என்று சொல்ல முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.
கனமழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்த பிறகு, மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதையும் எடுக்காமலிருந்தது ஏன்? பாதித்த இடங்களுக்கு அமைச்சர்களும் அதிகாரிகளும் தாமதமாகவே சென்றனர் எனக் குற்றம்சாட்டிய நிர்மலா சீதாராமன் 2015 சென்னை வெள்ள பாதிப்பிலிருந்து தமிழக அரசு என்ன கற்றுக்கொண்டது என்ன என்று கேள்வி எழுப்பினார். மேலும், வெள்ளத் தடுப்பு நடவடிக்கைக்காகச் செலவு சேய்த ரூ.4,000 கோடி எங்கேப் போனது? என்றும் 45 விழுக்காடு பணிகளை மட்டும் முடித்துவிட்டு 92 விழுக்காடு பணிகள் நிறைவடைந்தது எனக் கூறியது ஏன் என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார்.