சென்னை:காப்பீடு என்பது தற்போது மனிதர்களின் அத்தியாவசியங்களில் ஒன்றாக உள்ளது. அதிலும் முக்கியமாக மருத்துவக் காப்பீடு (Health Insurance) என்பது தனிநபர் அல்லது ஒரு குடும்பத்தின் முக்கிய அங்கமாக விளங்குகிறது. காரணம், போதிய வருமானமின்மை, அதிகப்படியான மருத்துவச் செலவு மற்றும் எதிர்பாராத நேரங்களில் ஏற்படும் மருத்துவச் செலவுகள் உள்ளிட்டவைகள் அடங்கும்.
இந்த நிலையில் மருத்துவக் காப்பீடுகள், அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களால் பல்வேறு விதிமுறைகளுக்கு உட்பட்டு வழங்கப்படுகிறது. இந்த மருத்துவக் காப்பீட்டை எடுக்கும்போது, அதற்கான நெறிமுறைகளைக் கவனமாக ஒரு முறைக்குப் பல முறை படித்துப் பார்க்க வேண்டும். அதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின், சம்பந்தப்பட்ட முகவர் அல்லது காப்பீட்டு நிறுவனத்தை அணுகி, அதனை உடனடியாக தீர்த்துக் கொள்ள வேண்டும்.
இதில் பெரும்பாலும் மருத்துவக் காப்பீட்டை எடுத்த உடன், அதனை முழுமையாகப் பயன்படுத்தி விடலாம் என்ற கருத்து பொதுவாகவே உள்ளது. ஆனால், விபத்து தொடர்பானவை மட்டுமே பாலிசி எடுத்த உடன் பயன்படுத்த முடியும். மற்ற வகை மருத்துவத்துக்குக் குறிப்பிட்ட காலம் காத்திருக்க வேண்டும். இதற்கு ‘காத்திருப்பு காலம்’ (waiting periods) என்று பெயர்.