மக்களவையில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, நிதித்துறை இணையமைச்சர் அனுராக் சிங் தாகூரிடம், 2020-21 நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி குறியீடு 7.7% வீழ்ச்சி அடையும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை மீட்டெடுக்க அரசு என்னென்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த நிதித்துறை இணையமைச்சர், ” நோய்த் தொற்று தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை சீரமைக்க, பிரதம மந்திரி வேலை வாய்ப்புத் திட்டம், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டம், சிறு குறு, மற்றும் நடுத்தர தொழில்களுக்கான நிதியுதவித் திட்டம், தொழிற்சாலைகளுக்கான நில வங்கித் திட்டம், மற்றும் புதிய மின்சாரக் கட்டணக் கொள்கைகள், இவற்றின் மூலம், இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க, அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
13 துறைகளில் உற்பத்தி ஊக்குவிப்புத் திட்டங்களும், 7,400 தேசிய கட்டமைப்பு திட்டங்களும், ஒரு கோடி மக்களுக்கு பயனளிக்கும் வகையில், மின்சார வசதிகளும், காப்பீட்டுத் துறையில், அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்கவும், தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயங்களை வலுப்படுத்தவும், கூட்டுறவுத் துறைகளை மேம்படுத்தவும், தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.