டெல்லி: வருகிற செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய நாட்களில் இந்தியா தலைமை தாங்கும் ஜி20 மாநாடு, டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக உலகத் தலைவர்கள் பலரும் இந்தியாவிற்கு வருகை தந்து கொண்டிருக்கின்றனர். மேலும், இதற்காக டெல்லியில் பலத்த பாதுகாப்புடன் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளது. முக்கியமாக, டெல்லி விமான நிலையம் அரசு மூத்த அதிகாரிகளால் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறது.
இந்த நிலையில், இன்று (செப்.6) மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஜி20 இந்தியா (G20 India) என்னும் மொபைல் செயலியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது, இந்த ஜி20 மாநாடு மொபைல் செயலியை அனைத்து அமைச்சர்களும் பதிவிறக்கம் செய்து முறையாக பயன்படுத்த வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார். அது மட்டுமல்லாமல், இந்த செயலியின் மூலம் டிஜிட்டல்மயமாக்கப்பட்ட இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சி முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் பிரதமர் தெரிவித்தார்.
ஜி20 இந்தியா செயலியின் முக்கிய அம்சங்கள்: இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் G20 India என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த செயலியின் மூலம் ஜி20 மாநாடு தொடர்பான விரிவான ஆலோசனை மற்றும் நிகழ்வின் விரிவான தகவல்களைப் பெறலாம். ஜி20 மாநாட்டின் முழு நிகழ்ச்சி நிரல், ஆதாரங்கள், ஊடக குறிப்புகள் மற்றும் உள்ளார்ந்த தகவல்களை அறிந்து கொள்ளலாம்.