ஹைதராபாத்: விபுல் அம்ருத்லால் ஷாவின் தயாரிப்பில், இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள படம், 'தி கேரளா ஸ்டோரி (The Kerala Story)'. கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி வெளியான இப்படத்தின் டிரைலரின் முதலிலேயே, இது உண்மைச் சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் என வெளிப்படுத்தப்படுகிறது.
அதனையடுத்து வரும் காட்சிகளில், கேரளாவில் உள்ள கல்லூரி விடுதியின் ஒரு அறையில் ஒரு இஸ்லாமிய பெண்ணும், 3 பிற மதங்களைச் சார்ந்த பெண்களும் வருகிறார்கள். பிற மதங்களைச் சார்ந்த பெண்களை மூலைச் சலவை செய்து, அவர்களை இஸ்லாமிய மதத்துக்கு மாற்றுவது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
பின்னர், அவர்கள் தடை செய்யப்பட்டுள்ள ஐஎஸ்ஐஎஸ் அமைப்புகளுக்காக பணிபுரிவதற்கு சிரியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு நாடு கடத்தப்படுகிறார்கள். மேலும், கேரளாவில் இருந்து கிட்டத்தட்ட 32 ஆயிரம் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ்(ISIS) அமைப்புகளுக்கு செல்வதாக காட்டப்பட்டிருக்கிறது.
இது மதச்சார்பின்மையை சீர்குலைக்கும் வகையிலும், இஸ்லாமிய மதத்தை தவறாக சித்தரிப்பதாகவும் உள்ளதாக பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றன. முக்கியமாக, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், "மதச்சார்பற்ற மண்ணான கேரளாவை, மதத் தீவிரவாதத்தின் மண்ணாக காட்டுவதற்கான சங்பரிவாரின் அஜண்டாவை இந்த திரைப்படம் பரப்புகிறது என்பதை இந்த டிரெய்லர் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. விசாரணை முகமைகளும், நீதிமன்றங்களும், மத்திய உள்துறை போன்றவை மறுத்திருக்கும் ‘லவ் ஜிகாத்’ குற்றச்சாட்டை இந்த திரைப்படத்தில் மையப்படுத்துவது ஒரு திட்டமிட்ட நடவடிக்கை. கேரளாவில் உள்ள மத ஒற்றுமையை தகர்த்து சங்பரிவார், வகுப்புவாத விஷ விதைகளை விதைக்க முயற்சி செய்கிறது. மத வெறியையும், பிரிவினையையும் உருவாக்க சினிமாவைப் பயன்படுத்துபவர்களை கருத்து சுதந்திரத்தில் நியாயப்படுத்து சரியல்ல. சமூக விரோத செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்" என தெரிவித்திருந்தார்.
அதேபோல், கேரள மாநில காங்கிரஸ் தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான வி.டி.சதீஷன், "படத்தில் என்ன இருக்கப் போகிறது என்பது டிரெய்லரிலேயே தெரிகிறது. பொய்களால் இப்படம் நிரம்பி உள்ளது. எனவே இந்த படத்தை மத்திய அரசு தடை செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர் லீக் அமைப்பு தங்களது சமூக வலைதள பக்கத்தில், "தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் 32 ஆயிரம் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது உண்மை என்றும் அவர்கள் வாதிடுகின்றனர். கடத்தப்பட்ட பெண்களின் முகவரியைக் கொடுங்கள் என்று கேட்டால், அதற்கு மவுனம் மட்டுமே காக்கின்றனர். எனவே, நாங்கள் ஒரு சவாலை முன் வைக்கிறோம். நாடு கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண்களின் அடையாளத்தை ஆதாரத்துடன் நிரூபித்துக் காட்டுங்கள். அவ்வாறு நிரூபிக்கும் நபருக்கு 1 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும். எங்களது மாவட்ட அலுவலகங்களில் மே 4ஆம் தேதி காலை 11 மணி முதல் 5 மணிக்குள் உண்மைத் தன்மையை நிரூபித்து பரிசை பெற்றுச் செல்லலாம்" என குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு சூடுபிடித்த வாதத்திற்கு தற்போது காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை உறுப்பினருமான சசி தரூர், "நான் அழுத்தமாகச் சொல்கிறேன், நான் படத்தைத் தடை செய்யக் கூறவில்லை. கருத்துச் சுதந்திரம் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்பதற்காக அது மதிப்புமிக்கதாகிவிடாது. ஆனால், இது எங்களின் யதார்த்தத்தை தவறாக சித்தரிப்பது என்று உரத்த குரலில் சொல்ல கேரள மக்களுக்கு முழு உரிமை உண்டு. ஒருவேளை இது உங்களின் கேரள கதையாக இருக்கலாம். ஆனால், அது எங்களின் கேரளக் கதை அல்ல” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த நிலையில், வருகிற மே 5ஆம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில், மத்திய அரசு படத்திற்கு தடை விதிக்குமா என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: சர்ச்சையைக் கிளப்பிய 'The Kerala Story' டிரெய்லர்: கேரளாவை பற்றி அவதூறு? கொந்தளித்த பினராயி விஜயன்!