புதுச்சேரியில் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில்15 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், 2 திமுக எம்எல்ஏக்கள், 1 சுயேச்சை எம்எல்ஏ உடன் ஆட்சி அமைத்து முதலமைச்சராகப் பதவியேற்றார் நாராயணசாமி.
காங்கிரஸ் எம்எல்ஏ தனவேல் கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக கடந்த ஆகஸ்ட்டில் தகுதி நீக்கம்செய்யப்பட்டார், சமீபத்தில் அமைச்சர்கள் இருவர் உள்பட ஐந்து பேர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர்.
இதனால் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 15 லிருந்து ஒன்பதாக குறைந்தது. இதனால் காங்கிரஸ் அரசு அறுதிப்பெரும்பான்மையை இழந்துவிட்டது..
காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்ததும் அடுத்தது என்ன? இதையடுத்து சட்டப்பேரவையைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முதலமைச்சர் நாராயணசாமிக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று காலை சட்டப்பேரவையில் முதலமைச்சர் நாராயணசாமி கொண்டுவந்த நம்பிக்கை வாக்கெடுப்புத் தீர்மானம் தோல்வியடைந்தது என சபாநாயகர் அறிவித்துள்ளார்.
இதனையடுத்து பெரும்பான்மையை இழந்தது நாராயணசாமி அரசு. தொடர்ந்து துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார் நாராயணசாமி.
காங்கிரஸ் 9, திமுக 2, சுயேச்சை 1 என ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 12 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். எதிர்க்கட்சி வரிசையில் என்.ஆர். காங்கிரஸ் 7, அதிமுக 4, பாஜக (நியமன உறுப்பினர்கள் மூவர்) ஆகிய 3 கட்சிகளைச் சேர்ந்த மொத்தம் 14 பேர் எம்எல்ஏக்கள் உள்ளனர்.
காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்ததும் அடுத்த அதிக எண்ணிக்கையில் என்.ஆர். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உள்ளனர். அக்கட்சியின் தலைவர் ரங்கசாமியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்புவிடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இதற்கு கூட்டணிக் கட்சியான பாஜக, அதிமுக ஆதரவளிக்கும்பட்சத்தில் ரங்கசாமி ஆட்சி அமைக்கலாம், தேர்தல் அறிவிப்பு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில் ஆட்சி அமைத்தால் மக்களிடம் அதிருப்தி ஏற்படும்.
எனவே ஆட்சி அமைக்க ரங்கசாமி விரும்பமாட்டார் என்றும் மேலும் எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைக்க முன்வராதபட்சத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்க துணைநிலை ஆளுநர் பரிந்துரை செய்வார். அதன்பின் துணைநிலை ஆளுநர் நேரடிப்பார்வையில் புதுச்சேரி அரசு நிர்வாகம் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.