டெல்லி:புத்தகங்கள், எண் கணிதம், தகவல் தொழில் நுட்பங்கள், கணினி மயமாக்கம் போன்ற பல்வேறு காரணிகள் கல்வியை மாணவர்கள் மத்தியில் மேலும் மேலும் வலுப்படுத்தி கொண்டிருக்கிறது. ஆனால் இவை அனைத்தும் பெரும்பாலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் வைக்கப்படும் தேர்வுகளிலே தனது முற்றுப்புள்ளியை வைத்து விடுகிறது.
இதற்கு நம் வீடுகளில் இருக்கும் குழந்தைகளே சாட்சியாக இருக்கின்றனர். ‘இதனை எனது ஆசிரியர் சொல்லி தரவில்லை’, ‘இது என்னுடைய புத்தகத்தில் இடம் பெறவில்லை’, ‘நான் இன்னும் அந்த பாடத்தை கற்கவில்லை’ என்ற பல சொல்லாடல்களை நாம் நம்மிடையே உள்ள குழந்தைகளிடத்தில் இருந்தே கேட்டிருப்போம்.
இப்படியான வார்த்தைகள், அவர்களின் ஏட்டுக்கல்வியை செழுமைப்படுத்துமே தவிர, அவர்களின் சமூக உறவை வளர்க்காது. இது ஒருவருக்கு அவருடைய வாழ்வில் நிலையற்ற தன்மை, ஒரே நிலையில் இல்லாத முடிவு, சிக்கலான நிலைகள் மற்றும் தெளிவின்மைக்கு வித்திடவும் வாய்ப்புள்ளது.
எனவே ஒருவர் தன்னுடைய மதிப்பை மதிப்பெண்ணில் மட்டுமே காண்பிக்காமல், தனது சமூக உரையாடல்களில் காண்பிக்கும்போது தான் அதற்கான மரியாதையும் மதிப்பும் அதிகரிக்கிறது. இதனை நாம் எந்த பாடப் புத்தகத்தில் இருந்தும் கற்றுக்கொள்ள முடியாது.
நம்முடைய வாழ்க்கை அனுபவங்கள், சமூகத்தில் மற்றவர்களுடன் பழகுதல், ஒருவரை புரிந்துகொள்ளும் பக்குவம் ஆகியவற்றின் மூலமாக நம்முடைய உணர்வியல் மாற்றம் சமூக மாற்றமாக மாறும். இதன் மூலம் சுய விழிப்புணர்வு, சுய மேம்படுத்துதல், தீர்க்கமான முடிவெடுத்தல், சமூக விழிப்புணர்வு மற்றும் உறவுகளை கையாளும் முறைகளை தெரிந்துகொள்ளலாம்.
ஒவ்வொரு இடத்திலும் நம்முடைய மதிப்பு உயர்வதற்கு சமூக உரையாடல்கள் முக்கிய பங்காற்றுகிறது. எனவே தான் சமூக - உணர்வியல் தொடர்பான தனிப்பட்ட பாடம், மாணவர்களுக்கு பள்ளிகளிலே வழங்கப்பட வேண்டும் என கல்வி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் உளவியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க:தூக்கமின்மையை போக்கும் "ஸ்மார்ட் தலையணை" - மாணவரின் சூப்பர் கண்டுபிடிப்பு!