டெல்லி:காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையில் ஈடுபட்டு உள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் கன்னியாகுமரியில் தொடங்கப்பட்ட இந்திய ஒற்றுமை யாத்திரை கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக வரும் ஜனவரி மாத இறுதியில் ஜம்மு காஷ்மீரில் நிறைவு பெற திட்டமிடப்பட்டுள்ளது.
150 நாட்களில் ஏறத்தாழ 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை செல்ல ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார். ஒவ்வொரு மாநிலங்களும் ராகுல் காந்திக்கு பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். இந்நிலையில், டெல்லியில் நடைபெற்று வரும் ராகுல் காந்தியின் யாத்திரையில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.
யாத்திரையில் கலந்து கொள்ளுமாறு ராகுல் காந்தியின் அழைப்பை ஏற்று இன்று (டிச.24ஆம் தேதி) சென்னையிலிருந்து விமானம் மூலம் நடிகர் கமல்ஹாசன் மற்றும் மக்கள் நீதி மய்ய கட்சி உறுப்பினர்கள் டெல்லி சென்றனர்.
ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான 50க்கும் மேற்பட்ட மக்கள் நீதி மய்ய கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஏறத்தாழ 5 கிலோ மீட்டர் தூரம், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட கட்சியினர் பாதயாத்திரை சென்றனர்.
தொடர்ந்து டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய நடிகர் கமல்ஹாசன், "நான் ஏன் இந்த பாதயாத்திரையில் இருக்கிறேன் என பலர் கேட்கிறார்கள். இந்தியக் குடிமகனாகப் பாதயாத்திரையில் கலந்து கொண்டேன்(I am here as an Indian) என கமல்ஹாசன் தெரிவித்தார். எனக்கு பல்வேறு மாறுபட்ட சித்தாந்தங்கள் இருந்தாலும் சொந்தமாகக் கட்சித் தொடங்கினேன், தேச ஒற்றுமைக்காக ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் கலந்து கொண்டேன் என்றார்.
மேலும் கண்ணாடி முன் நிற்கும் போது இந்த நாட்டுக்கு நான் மிகவும் தேவைப்படும் நேரம் இது என்று கூறிக் கொள்வேன் என்று கூறிய கமல்ஹாசன், அப்போது தனக்குள் இருந்து ஒரு குரல் கமல் நாட்டை உடைக்க உதவாதே, ஒன்றுபட உதவு என்றும் கூறியதாகவும் தெரிவித்தார். அரசியலமைப்பில் எந்த ஒரு நெருக்கடியான சூழல் ஏற்பட்டாலும் வீதிக்கு வந்து போராடுவேன் என கமல்ஹாசன் கூறினார்.
தன் தந்தை காங்கிரசைச் சேர்ந்தவர். ராகுல் காந்தி தன்னை தமிழன் என அடையாளப்படுத்தி உள்ளார். அந்தவகையில் அவர் எனக்குச் சகோதரர். நான் காந்தியைப் பின்பற்றுபவன் என கமல்ஹாசன் கூறினார். நேருவின் கொள்ளுப்பேரன் ராகுல் காந்தி, காந்தியின் கொள்ளு பேரன் நான். இரு பேரன்களும் ஒன்றிணைந்து பாதயாத்திரை மேற்கொண்டு உள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
முன்னதாக நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில், "இந்தியாவின் பன்மைத்துவத்தைப் பாதுகாக்க அன்புச் சகோதரர் ராகுல்காந்தி முன்னெடுக்கும் பாரத் ஜோடோ ஒற்றுமை யாத்திரையில் நானும், மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளும் கலந்து கொள்கிறோம். மண் மொழி மக்கள் காக்க ஓர் இந்தியக் குடிமகனாக என் பங்களிப்பு எப்போதும் இருக்கும் ஜெய் ஹிந்த்" என பதிவிட்டு உள்ளார்.
பாதயாத்திரையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, அவரது கணவர் ராபர்ட் வதேரா மற்றும் பிரியங்கா காந்தியின் மகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கு முன் கடைசியாகக் கடந்த அக்டோபர் மாதம் கர்நாடகாவில் நடந்த பாதயாத்திரைக் கூட்டத்தில் சோனியா காந்தி அதன்பின் டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
காந்தி குடும்பத்தினரின் வருகையொட்டி தலைநகர் டெல்லி விழாக் கோலம் பூண்டு இருந்தது. பாதயாத்திரையில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:ஸ்ரீகிருஷ்ண ஜென்ம பூமி-இத்கா மசூதி வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...