தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கவாச் கருவி என்றால் என்ன? ரயில்கள் விபத்தை அது எப்படி தடுக்கும்? - கோரமண்டல் ரயில் விபத்து

ஒடிசாவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 3 ரயில்கள் விபத்துக்குள்ளான நிலையில், கவாச் கருவி பொருத்தப்பட்டு இருந்தால் விபத்தை முன்கூட்டியே தடுத்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அப்படியெனில் கவாச் கருவி என்றால் என்ன? அதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தி..

Kavach
Kavach

By

Published : Jun 3, 2023, 3:32 PM IST

ஐதராபாத் : ஒடிசா மாநிலம் பாலசோரில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் ரயில் உள்பட அடுத்தடுத்து மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளானதில் 280க்கும் மேற்பட்ட பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 900 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகளில் மாநில மற்றும் தேசிய மீட்பு படைகள், பேரிடர் மீட்பு படைகள் உள்ளிட்டோர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த மூன்று ரயில்களும் எப்படி விபத்துக்குள்ளானது, ரயில்களில் விபத்துகளை முன்கூட்டியே அறிந்து அதை தடுக்கும் கவாச் கருவி பொருத்தப்பட்டு இருந்ததா அல்லது ரயில்களில் கவாச் கருவி பொருத்தப்படவில்லையா என்ற பல்வேறு சந்தேகங்கள் எழும்புகின்றன.

கவாச் கருவி என்றால் என்ன?

கவாச் கருவி என்பது ரயில்களில் பாதுகாப்பு அம்சத்தை திறன்பட மேற்கொள்ள இந்திய ரயில்வேயால் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு கருவியாகும். தானியங்கி கருவியான கவாச் இந்திய ரயில்களில் ஏற்படும் விபத்துகளை முன்கூட்டியே அறிந்து தடுக்கும் திறன் கொண்டது.

விமான பயணங்களின் போது ஏற்படும் பேரிடர் மற்றும் விபத்துகளை தடுக்க விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு செயல்படுவது போல, ரயில்களில் விபத்துகளை தடுக்க உதவுகிறது. குளிர்காலத்தில் ஏற்படும் அடர்த்தியான மூடுபனி உள்ளிட்ட பாதகமான சூழ்நிலைகளின் போது ரயில் இயக்கங்களுக்கு உதவுவதோடு, சிக்னல் கோளாறால் ஏற்படும் விபத்துகளை தடுக்கவும் இந்த கருவி உதவுகிறது.

கவாச் கருவியின் முக்கிய அம்சங்கள் :

ரயில் பைல்ட்டின் கட்டுப்பாட்டை மீறி ரயில் இயங்கும் நேரத்தில் விபத்துகளைத் தடுக்கவும், மோதல்கள் ஏற்படுவதை தடுக்கும் நடவடிக்கையாக, தானாகவே பிரேக்குகளைப் பயன்படுத்தும் சிறப்பு அம்சம் கவாச் கருவியில் உள்ளது. மேலும், கவாச் கருவியின் கூடுதல் முக்கிய அம்சங்களாக தானியங்கி பிரேக்குகள், மூடுபனிக் காலங்களில் ஏற்படும் பார்வை குறைபாடு, அதிவேகம், எல்ஜின் டிரைவருக்கும், கார்டுக்கும் இடையிலான தகவல் தொடர்பு உள்ளிட்ட நிலைகளை துல்லியமாக கொண்டு செல்லும் பணிகளை கவாச் கருவி மேற்கொண்டு வருகிறது.

கடந்த 2022ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் உள்நாட்டு ரயில் பாதுகாப்பு குறித்து நடவடிக்கை எடுக்க அத்மநிர்பார் திட்டத்தின் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த திட்டத்தின் படி முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உலக தரம் வாய்ந்த கவாச் கருவியை இந்திய ரயில்வேயில் 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு பொருத்த திட்டமிடப்பட்டது.

அதன்படி 250 கிலோ மீட்டர் தூரத்திற்கு சோதனை ஓட்டத்தை சேர்த்து, தெற்கு மற்றும் மத்திய ரயில்வேயின் ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த கவாச் கருவி பொருத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக இந்திய ரயில்வேயில் கவாச் கருவியை 16 கோடியே 88 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மக்களவையில் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

முதற்கட்டமாக டெல்லி - ஹவுரா மற்றும் டெல்லி - மும்பை வழித்தடங்களில் கவாச் கருவியை செயல்படுத்தும் முறையை வரும் 2024ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு முடிக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்து இருந்தார். இந்த ரயில் விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்தும் வருங்காலத்தில் இதுபோன்ற மோசமான நிகழ்வுகள் நடைபெறாத வண்ணம் தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க :Coromandel Express: உயிரிழப்பு எண்ணிக்கை 261 ஆக உயர்வு - மத்திய அரசு நிவாரணம் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details