டெல்லி: ஜி20 மாநாட்டின் 18வது ஆண்டுக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இந்த ஜி 20 என்ற கூட்டமைப்பு உருவானது எதற்காக என்றால்.. பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நாடுகளை கை கொடுத்து தூக்கி விடவும், வரும் காலத்தில் வளர்ச்சிப் பாதையை நோக்கி அந்த நாடுகள் முன்னேற வழிவகை செய்யவும் வேண்டிதான் எனக்கூறலாம்.
ஐக்கிய நாடுகள் அவையின் ஆசிய உறுப்பு நாடுகளில் இந்தியா உட்பட 48 நாடுகள் உள்ளன. இந்த ஒட்டுமொத்த நாடுகளின் பொருளாதாரம் கடந்த 1997 முதல் 98ஆம் ஆண்டுகளில் நிதி நெருக்கடியில் சிக்கி இருந்தது. இதை மீட்டெடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், சர்வதேச பொருளாதார ஒத்துழைப்பு என்பது அனைத்து நாடுகளுக்கும் தேவை என்ற நோக்கத்திலும் ஐ.நா.வின் கூட்டு முயற்சியில் கடந்த 1999ஆம் ஆண்டு ஜி20 நாடுகள் குழு உருவானது.
இதில் நாடுகளின் நிதி அமைச்சர்கள், மத்திய வங்கி தலைவர்களுக்கான முறைசாரா மன்றமாக இருந்த நிலையில் காலப்போக்கில் அது வளர்ச்சி பெற்றது. தொடர்ந்து கடந்த 2007ஆம் ஆண்டு ஆசிய நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையை சரிகட்டும் நோக்கத்தில் ஜி20 குழு மேம்படுத்தப்பட்டது. இதில், உலக அளவில் பணக்கார நாடுகளான அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளையும், ஆசிய நாடுகளின் தலைவர்களையும் கொண்ட பலமிக்க குழுவாக அமைந்தது.
இந்த குழுவின் நோக்கம் ஆரம்பகட்டத்தில் பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த நிலையில் அது தற்போது விரிவடைந்து, பருவநிலை மாற்றம், சர்வதேச கடன் தொடர்பான விவகாரங்கள், நிலையான எரிசக்தி, பன்னாட்டு நிறுவனங்களுக்கு வரி விதிப்பது உள்ளிட்ட இன்னும் பல பிரச்சினைகள் குறித்து விவாதிக்கிறது.
குறிப்பாக இந்தியாவில் நடக்கும் இந்த 18வது ஜி20 மாநாட்டில் ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து விவாதிக்கபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாநாட்டில் சீன அதிபர் பங்கேற்காதது பேசு பொருளாக அமைந்துள்ளது. அதோடு பலதரப்பட்ட நிறுவனங்களிடமிருந்து வளரும் நாடுகளுக்கு அதிக கடன்கள், சர்வதேச கடன் கட்டமைப்புச் சீர்திருத்தம், கிரிப்டோகரன்சி மீதான கட்டுப்பாடுகள் ஆகியவற்றை மையமாக வைத்து விவாதிக்கப்படும்.