டெல்லி:தலைநகரான டெல்லியில் காற்று மாசுபாடு ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாக இருந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு காற்றின் தரம் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. இன்று (நவ.8) டெல்லியில் காற்றின் தரம் கடுமையான வகையில் பாதிக்கப்பட்டு, புகை மூட்டத்துடன் காணப்படுகிறது. SAFAR இந்தியாவின் நிலவரப்படி, டெல்லியில் இன்று காற்று தரக் குறியீடு (Air Quality Index) 395ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.
காற்று தரக் குறியீடு எண் என்றால் என்ன?மனிதர்கள் மற்றும் இந்த உலகில் வாழும் அனைத்து உயிரினங்களும் சுவாசிக்க தேவையான சுத்தமான காற்று உள்ளதா என்பதன் அளவீடு. மேலும், இது மக்களுக்கு மாசுபட்ட காற்று ஏற்படுத்தக் கூடிய ஆபத்தை வெளிப்படுத்துகிறது. இந்த முறை முதல் முறையாக காற்றின் தரத்தை கண்காணிக்க 2014ஆம் ஆண்டு டெல்லியில் அறிமுகம் செய்யப்பட்டது.
காற்றின் மாசுபாடை மக்கள் தெரிந்து கொள்வதற்காக 240 முக்கிய நகரங்களில் அறிவிப்பு பலகையை மத்திய மற்றும் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் அமைத்தது. அந்த வகையில், காற்று மாசுபாட்டைக் கண்டறிய காற்றுத் தரக் குறியீடு எண்கள் 0 முதல் 500 வரை என ஆறு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி,
- 0-50:ஆரோக்கியமான சூழல் மற்றும் குறைந்த பாதிப்பைக் குறிக்கிறது.
- 51 - 100: நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நபர்களுக்கு எளிதில் மூச்சுக் கோளாறு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
- 100 -200: நுரையிரல், இருதய நோய் சம்பந்தப்பட்ட பிரச்னை உள்ளவர்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்தும்.
- 201-300: காற்று மோசமான நிலையை அடைந்து, ஏற்கனவே மூச்சுக் கோளாறு, இருதய பிரச்னை உள்ளவர்களின் நிலையை மோசமடையச் செய்கிறது.
- 301 -400:மிக மோசமான நிலை அடைந்த காற்றை சுவாசிப்பதால், உடல் நிலை மிக மோசமான நிலை அடைந்து பல விளைவுகளை ஏற்படுத்தும்.
- 401-500:நல்ல உடல் நலத்துடன் இருக்கும் நபர்களுக்கு மூச்சு சம்பந்தமான நோய்களை ஏற்படுத்தி கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.