ஹைதராபாத்: பெங்களூரில் இருக்கும் பருவ நிலைச் செயற்பாட்டாளரான 21 வயது திஷா ரவி என்பவர் ஞாயிற்றுக்கிழமையன்று கைது செய்யப்பட்டார். அவர் மீது வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு இதுதான்; விவசாயிகளின் போராட்டம் சம்பந்தமாக சமூக வலைதளங்களில் ‘டூல்கிட்’டைப் பகிர்ந்து கொண்டதில் அவருக்குப் பெரும்பங்கு இருப்பதாகச் சொல்லப்பட்டது. திஷா என்னும் அந்தப் பெண் ஐந்து நாட்கள் போலீஸ் கஸ்டடியில் இருக்கிறார்.
திஷா ரவி ‘டூல்கிட் கூகுள் டாக்’ என்பதின் எடிட்டராக இருக்கிறார் என்று சொல்லும் காவல்துறை, டாக்குமெண்டின் (ஆவணம்) உருவாக்கத்திலும் அதைப் பரப்புவதிலும் அவர் ஒரு முக்கியமான சதிகாரர் என்று குற்றம் சாட்டியிருக்கிறது. அந்த டூல்கிட்டை அவர் பரப்பியதன் விளைவாக பின்பு ஸ்வீடன் செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க் அதைப் பயன்படுத்திக் கொண்டார் என்றும், காவல்துறை மேலும் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறது.
ஸ்வீடன் பருவநிலைச் செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பெர்க் ‘டூல்கிட்’ என்றழைக்கப்படும் கூகுள் ஆவணத்தை பிப்ரவரி 5ஆம் தேதி அன்று ட்விட்டரில் பகிர்ந்துவிட்டு பின்பு அதை நீக்கினார். பின்னர் அவர் அந்த ஆவணத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவத்தைத் தனது சமூக வலைதளங்களில் பகிர, அது மேலும் பரவலாகப் பகிரப்பட்டது.
காலிஸ்தானுக்குச் சார்பாக, இந்திய அரசுக்கு எதிராக ஒரு சமூக, கலாச்சார, பொருளாதார யுத்தத்தைத் தொடங்கும் நோக்குடன் இந்த ‘டூல்கிட்டை’ உருவாக்கியவர்கள் மீது முதல் தகவல் அறிக்கையைக் காவல்துறை பதிவு செய்தது. சதி, ராஜத்துரோகம் என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலும், மற்றும் இந்தியன் தண்டனை சட்டம் (ஐபிசி) பிற பகுதிகளின் கீழும் வழக்குப்பதிவுச் செய்யப்பட்டிருக்கிறது.
இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட, ஆனால் தப்பி ஓடிவிட்ட வழக்கறிஞர் நிகிட்டா ஜேக்கப், பொறியாளர் ஷாந்தனு முலுக் ஆகியோர் மீது பிணையில் வரமுடியாத வாரண்ட்டுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
சர்ச்சையின் மையத்தில் இருக்கும் டூல்கிட் என்றால் என்ன?
’டூல்கிட்’ என்றால் வழமையான ஓர் ஆவணம் அல்லது ஒரு குட்டிப்புத்தகம்தான். ஒரு லட்சியத்தை அல்லது பிரச்சினையை விளக்குவதற்காக உருவாக்கப்படுவது. சில பிரச்சினைகள் சம்பந்தமாகப் பரப்புரையைத் தொடர்ந்து செய்வதற்கு உதவும் விலை மதிப்பில்லாத ஓர் ஆதாரம் அது. பரப்புரைக்கான செயல் திட்டமும் அதில் உள்ளடங்கும்.
குறிப்பாக ஒரு பிரச்னை பெரிதாக வெடிக்கும்போது அல்லது உருவாகிக் கொண்டிருக்கும்போது, முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் பிரச்னைக்கான வழிகாட்டுதலையும், அறிவுரையையும் வழங்கக் கூடியவை அந்த ‘டூல்கிட்’டுகள்தான். ஒரு பிரச்னையை நன்றாகப் புரிந்து கொள்வதற்கும், அதை ஆய்வு செய்வதற்கும் தேவையான தகவலை ஒரு ‘டூல்கிட்’ தரமுடியும்.
அடிப்படைப் பிரச்னைகளை பற்றிய தகவல்களை, கொடுக்கப்பட்ட மனுக்கள், நடத்திய போராட்டங்கள், மக்கள் இயக்கங்கள் ஆகிய தரவுகளை அந்த ஆவணம் கொடுக்கும். கிரேட்டா தன்பெர்க் பகிர்ந்துகொண்ட ‘டூல்கிட்’ சொல்வது இதுதான்: “இப்போது நடந்துகொண்டிருக்கும் விவசாயிகளின் எதிர்ப்புகளைப் பற்றி ஒன்றும் தெரியாதவர்கள் இந்தச் சூழ்நிலையைப் பற்றி நன்றாகப் புரிந்து கொள்வதற்கும், தங்களின் ஆய்வுச் சிந்தனையின் அடிப்படையில் எப்படி விவசாயிகளை ஆதரிப்பது என்று முடிவுகள் எடுப்பதற்கும் உதவுவதற்காக இந்த ஆவணம் உருவாக்கப்பட்டிருக்கிறது.”