கவுகாத்தி: ஏக்நாத் ஷிண்டே நேற்று (ஜூன் 23) அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களிடம் பேசினார். அப்போது, "மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் 40 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். தேசிய கட்சியின் ஆதரவு நமக்கு உள்ளது. நமக்கு தேவைப்படும் சமயத்தில் அவர்கள் நமக்கு உதவுவார்கள் என ஷிண்டே, ஆதரவு எம்.எல்.ஏக்களிடம் உறுதிபடுத்தினார். மேலும் அவர், ‘நான் எடுத்த இந்த முடிவு வரலாற்று சிறப்பு மிக்கது’ என தெரிவித்தார்.
மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சியாக இருக்கும் பாஜகவிற்கும், சிவசேனாவின் இந்த சிக்கலான நிலைமைக்கும் தொடர்பு இருப்பதாக பல தரப்பினர் சந்தேகிக்கின்றனர். ஆனால், இதுபோன்ற குற்றச்சாட்டுகளை பாஜக இதுவரை மறுத்துள்ளது. "நாங்கள் ஏக்நாத் ஷிண்டேவுடன் பேசவில்லை. இது சிவசேனாவின் உள்விவகாரம். பாஜகவுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நாங்கள் ஆட்சி அமைக்க உரிமை கோரவில்லை" என்று மத்திய அமைச்சர் ராவ்சாகேப் பாட்டீல் தன்வே கூறினார்.
தற்போது ஷிண்டே கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நேற்று (ஜூன்23)கவுஹாத்தி ஹோட்டலில் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏக்கள் முகாமிட்டு இருந்தனர். அவரது ஆதரவாளர்கள் குறித்து ஷிண்டே அணியினர் வெளியிட்டுள்ள காணொளியில், எந்தச் சூழலிலும் ஒன்றாக இருப்போம், அனைத்தையும் ஒன்றாகச் சந்திப்போம் என்று அவர் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.