மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. ஆளுநராக ஜெகதீப் தன்கர் இருக்கிறார். அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நிலவிவருவதாகக் கூறப்படும் நிலையில், மேற்கு வங்க மாநில சட்டப்பேரவையை நேற்று (பிப்ரவரி 12) முதல் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக ஜெகதீப் தன்கர் அறிவித்தார்.
அரசியலமைப்புச் சட்டம் 174ஆவது பிரிவைப் பயன்படுத்தி சட்டப்பேரவையை காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக ஆளுநர் அறிவித்தார்.
இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கு வங்க சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும்விதமாக இன்று (பிப்ரவரி 13) ட்விட்டர் பதிவு செய்திருந்தார். அதில், "மேற்கு வங்க சட்டப்பேரவையை ஆளுநர் ஒத்திவைத்த செயல், விதிமுறைகள் மற்றும் மரபுகளுக்கு எதிரானது.
அரசியலமைப்புச் சட்டத்தை நிலைநிறுத்த மாநிலத்தின் தலைவர் முன்மாதிரியாக இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதை கொடுப்பதில்தான் ஜனநாயகத்தின் அழகு உள்ளது" என்று பதிவிட்டிருந்தார்.