கொல்கத்தா (மேற்கு வங்கம்): இஸ்ரேல் நாட்டைச் சார்ந்த என்.எஸ்.ஓ குழுமம் உருவாக்கிய பெகாசஸ் ஸ்பைவேர் செயலி மூலம் நாட்டில் முக்கியப்புள்ளிகள் பலரது தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக அண்மையில் தகவல் வெளியானது.
இந்நிலையில் இந்த தொலைபேசி ஒட்டுக்கேட்பு தொடர்பாக விசாரிக்க, மேற்கு வங்க அமைச்சரவை கூடி ஆலோசனை நடத்தியது. அந்த கூட்டத்தின் முடிவில் தொலைபேசி ஒட்டுக்கேட்பு தொடர்பாக இரு நபர் விசாரணை ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளதாக, மேற்கு வங்க மாநில தலைமைச் செயலாளர் நபண்ணா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக விசாரணை ஆணையத்தை உருவாக்கிய பின் மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், தொலைபேசி ஒட்டுக்கேட்பு தொடர்பாக நாட்டிலேயே முதல்முறையாக மேற்கு வங்க மாநிலமே விசாரணை ஆணையத்தை உருவாக்கியுள்ளது. இந்த விசாரணை ஆணையத்தில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் பீம்ராவ் லோகூர் என்பவரும், கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஜோதிர்மயி பட்டாச்சார்யாவும் பணியாற்றுபவார்கள் எனத்தெரிவித்தார்.
நாட்டிலேயே முதல்முறையாக ஆணையத்தை உருவாக்கிய மேற்கு வங்கம்
மேலும் இதுதொடர்பாக மம்தா பானர்ஜி விரிவாக பேசுகையில், 'மதிப்புமிக்க இரண்டு நீதிபதிகளையும், தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் விசாரிக்க வேண்டும் என்று பணித்தோம். அவர்களும் அதை ஏற்றுக்கொண்டார்கள். இந்த ஆணையம் மிக விரைவில் செயல்பாட்டுக்கு வரும்.