கொல்கத்தா: மேற்கு வங்கம் மாநிலம், ஜல்பைகுரி மாவட்டத்திலுள்ள துப்குரி சட்டமன்ற இடைத்தேர்தல் கடந்த செவ்வாய்கிழமை (செப்.5) நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணும் பணியானது இன்று (செப்.8) 11 சுற்றுக்களாக நடைபெற்று முடிவடைந்தது. இதில், அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வேட்பாளர் நிர்மல் சந்திர ராய் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேற்கு வங்கம் மாநிலம், ஜல்பைகுரி மாவட்டத்திலுள்ள துப்குரி பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் பிஷ்ணு பதா ரே கடந்த ஜூலை 25ஆம் தேதி உயிரிழந்தார். இதனால், இத்தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு செப்டம்பர் 5 ஆம் தேதி நடைபெற்றது. இதில், 78 சதவீத வாக்குகள் பதிவாகின. மேலும், வாக்கு எண்ணும் பணியானது இன்று (செப்.8) வடக்கு பெங்கால் பல்கலைக்கழகத்தில் பலத்த பாதுகாப்புடன் தொடங்கி தற்போது முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதன் படி, அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வேட்பாளர் நிர்மல் சந்திர ராய் 97,613 வாக்குகள் பெற்றுள்ளார். பா.ஜ.கவை சேர்ந்த வேட்பாளர் தபசி ராய் 93,304 வாக்குகள் பெற்றுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஈஸ்வர் சந்திர ராய் 13,758 வாக்குகள் பெற்றுள்ளார். மேலும் நோட்டாவில் 1,220 வாக்குகள் பதிவாகியுள்ளன. இதன் படி, அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வேட்பாளர் நிர்மல் சந்திர ராய் 4,309 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.